விசாரணையின் போது, ஆம் ஆத்மி தலைவர்களை சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்துகின்றனர் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார்.
புதுடெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக, டெல்லி முதல்வராக இருக்கும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ., சம்மன் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நிருபர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
மதுபான கொள்கையில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. பொய்யான குற்றச்சாட்டில் மணீஷ் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். நீதிமன்றத்தை பொய் சொல்லி, விசாரணை அமைப்புகள் தவறாக வழிநடத்துகின்றன. விசாரணையின் போது ஆம் ஆத்மி தலைவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.பி.ஐ., என்னை அழைத்துள்ளது. நிச்சயம் செல்வேன். கெஜ்ரிவால், ஊழல்வாதி என்றால், இந்த உலகில் நேர்மையானவர்கள் யாரும் இல்லை. என்னை கைது செய்ய சி.பி.ஐ.,க்கு பா.ஜ., உத்தரவு பிறப்பித்தால், நிச்சயம் அதனை சி.பி.ஐ., அதிகாரிகள் நிறைவேற்றுவார்கள். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.