உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆதிக் அகமது மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆதிக் அகமது. இவர் மீது குறைந்தது 100 கிரிமினல் வழக்குகள் உள்ளது. ஏற்கனவே இவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார். இதற்கிடையே நேற்று அவரும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோரை போலீசார் பிரயாக்ராஜில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர். பிரயாக்ராஜில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது அவரை சிலர் சுட்டுக் கொன்றுள்ளனர். இவரது மகனைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சில நாள்களுக்கு போலீசார் என்கவுண்டர் செய்தது குறிப்பிடத்தக்கது. மகனின் இறுதிச் சடங்கு நடந்து முடிந்து சில மணி நேரத்தில் தந்தையும் இப்போது கொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரயாக்ராஜில் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது MLN மருத்துவக் கல்லூரி வளாகத்திற்கு அருகே இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய மூன்று பேரையும் உபி போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும், இந்தச் சம்பவத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் மான் சிங் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கொலை செய்யப்பட்ட நபரின் வழக்கறிஞர் விஜய் மிஸ்ரா கூறுகையில், “அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்த போது, அங்கே வெளியே செய்தியாளர்கள் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அங்கே கூட்டத்திலிருந்து யாரோ ஒருவர் அகமது மற்றும் அவரது சகோதரர் மீது துப்பாக்கியால் சுட்டனர். மிகவும் நெருக்கமான தூரத்தில் இருந்து அவர்கள் சுட்டார்கள். நானும் அங்கே அவர்களுக்கு அருகே தான் இருந்தேன். இந்த வழக்கில் இரண்டு போரை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும், இது குறித்து போலீசார் எந்தவொரு செய்திக்குறிப்பையும் வெளியிடவில்லை” என்றனர்.
செவ்வாய்க்கிழமை தான் அகமதாபாத்தில் உள்ள சிறையில் இருந்து ஆதிக் அகமது உ.பி.க்கு அழைத்து வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த துப்பாக்கி சூடு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் ஆதிக் அகமதும் அவரது சகோதரரும் நிருபர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது திடீரென அங்கே அவர்கள் குண்டு பாய்ந்ததில் அவர்கள் சுருண்டு விழுந்து உயிரிழக்கிறார்கள். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜி பிரசாந்த் குமாரிடம் இது குறித்துக் கேட்டறிந்தார்.
ஆதிக் அகமது சமாஜ்வாடி கட்சியில் இருந்து எம்பியாக தேர்வு இருந்துள்ளார். கடத்தல் வழக்கில் தண்டனை பெற்றவர். 2005இல் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ ராஜு பால் கொலை மற்றும் கடந்த பிப். மாதம் ராஜு பாலின் வழக்கறிஞர் உமேஷ் பால் கொல்லப்பட்ட வழக்குகளிலும் அவர் மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆதிக் அகமதின் மகன்களில் ஒருவரான ஆசாத், வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தார். அவரையும் அவரது குலாம் ஆகியோரை ஜான்சியில் உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப் படையினர் என்கவுன்டர் செய்தனர். அவரது மற்ற 4 மகன்களில் இருவர் சிறையிலும் இருவர் சிறார் இல்லத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.