கர்நாடகா முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் இன்று எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார்!

கர்நாடகா முன்னாள் முதல்வரும் வட கர்நாடகா மூத்த பாஜக தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் இன்று தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார். இதனையடுத்து பாஜகவில் இருந்து வெளியேறும் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஹூப்ளி தொகுதியில் மீண்டும் போட்டியிட இருக்கிறார் ஜெகதீஷ் ஷெட்டர்.

கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஜேடிஎஸ், காங்கிரஸ், பாஜக ஆகியவை ஒவ்வொரு கட்டமாக வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. வேட்பாளர்கள் விவகாரத்தில் ஜேடிஎஸ், காங்கிரஸ் போல் இல்லாமல் பாஜகவில் கடும் அதிருப்தி வெடித்துள்ளது. பாஜகவில் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலருக்கும் சீட் கொடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த் எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான நிர்வாகிகளும் பாஜகவில் இருந்து வெளியேறி உள்ளனர்.

இந்தப் பட்டியலில் பாஜக மூத்த தலைவரும் வட கர்நாடகா பாஜகவின் முகமுமான முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும் இடம்பெற்ற்றுள்ளார். ஹூப்ளி தொகுதியை தமது கோட்டையாக வைத்திருப்பவர் ஜெகதீஷ் ஷெட்டர். ஆனால் இந்த முறை அவரை தேர்தலில் போட்டியிடக் கூடாது என பாஜக மேலிடம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிராக கடும் அதிருப்தி குரல் எழுப்பினார் ஷெட்டர். டெல்லிக்கு சென்று நேரடியாகவும் பேசிப் பார்த்தார். ஆனால் பாஜக மேலிடம் இறங்கி வரவில்லை. இதனையடுத்து பாஜகவில் இருந்து தாம் விலக முடிவு எடுத்துள்ளதாக நேற்று கூறினார் ஜெகதீஷ் ஷெட்டர். முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் பலரும் ஷெட்டரை நேரில் சந்தித்து சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் ஹூப்ளி தொகுதியில் தாம் போட்டியிடுவேன் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். இதனை பாஜக மேலிடம் ஏற்கவில்லை. இதனால் இன்று சட்டசபை சபாநாயகரை சந்தித்து தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார் ஷெட்டர்.