சூடானில் உள்நாட்டு மோதலால் இந்தியர்கள் வெளியேவர தடை!

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அந்நாட்டு ராணுவத்தினருக்கும் துணை ராணுவ படைக்கும் இடையே மோதல் வெடித்து நாட்டின் முக்கிய பகுதிகளில் வன்முறை காடாக மாறி இருக்கும் நிலையில், அங்கு வசித்து வரும் இந்தியர்கள் வெளியில் செல்ல வேண்டாம் எனவும், வீடுகளுக்கு உள்ளேயே தங்கி இருக்குமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

வட ஆப்பிரிக்காவில் சூடான் நாட்டில் ராணுவ ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். துணைத்தலைவராக துணை ராணுவப்படையின் தளபதியான ஜெனரல் முகமது ஹம்டன் டகலோ செயல்பட்டு வருகிறார். இப்போது ராணுவத்திற்கும் – துணை ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலால் தலைநகர் ஹர்டோமில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

கடந்த 13 ஆம் தேதி இந்த தாக்குதல் சம்பவங்கள் பூதாகரமாக வெடித்தன. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திக்கொண்டது, குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். ஆர்.எஸ்.எப் துணை ராணுவப் படைக்கு ஆதரவாக மேலும் சில படைகளும் ராணுவத்தின் மீது தாக்குதல்களை நடத்த தொடங்கி உள்ளதால் மோதல் மேலும் உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. தலைநகர் கார்ட்டூமில் அமைந்து இருக்கும் அரசு அலுவலகங்கள், விமான நிலையங்கள், பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. நேரம் செல்ல செல்ல மோதல்கள் பெரிதாகி வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

சூடான் அதிபர் மாளிகை, கார்ட்டூம் சர்வதேச விமான நிலையம், ராணுவ தளத்தை ஆர்.எஸ்.எப் துணை ராணுவமும் அதன் ஆதரவு படைகளும் சுற்றி வளைத்து கைப்பற்றி உள்ளன. இது குறித்து ஆர்.எஸ்.எப் துணை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களால் விமான நிலையத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடிந்தது. சூடானின் வடக்கு பகுதியில் இருக்கும் மெரோவே எனப்படும் ராணுவ தளத்தையும் நாங்கள் கைப்பற்றி உள்ளோம்” என்று கூறி உள்ளது.

நாட்டை காக்க வேண்டிய ராணுவமும் மற்றும் துணை ராணுவத்திற்கும் இடையிலேயே மோதல் வெடித்து தாக்குதல்கள் உக்கிரமடைந்து இருப்பதால் அந்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டினர் அச்சமடைந்து இருக்கின்றனர். இந்த நிலையில் சூடானில் நிலவி வரும் அசாதாரண சூழல் தொடர்பாக கார்ட்டூமில் அமைந்து இருக்கும் இந்திய தூதரகம் அங்கு வசித்து வரும் இந்தியர்களுக்கு அவசர எச்சரிக்கையை விடுத்து உள்ளது. இதுகுறித்து சூடானில் உள்ள இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் பதிவில், “சூடானில் தொடர்ந்து மோதல்களும், துப்பாக்கிச்சூடு தாக்குதல்களும் நடந்து வருவதால் அனைத்து இந்தியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்துகிறோம். வீடுகளுக்கு உள்ளே இருங்கள். வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள். இதனை உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வாருங்கள். அமைதியாக இருந்து அடுத்தடுத்த தகவல்களுக்கு காத்திருங்கள்” என்று எச்சரித்து உள்ளது.