வேலையில் சலிப்பு ஏற்பட்டால் பதவி விலகுவேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி

பார்க்கும் வேலையில் சலிப்பு ஏற்பட்டால் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கு ஆளுநராக ஆர்.என்.ரவி வந்த நாளில் இருந்தே இங்குள்ள அரசியல் கட்சியினர் அவரை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த ஆரம்பித்து விட்டனர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதா தொடங்கி 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டிருக்கிறார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. இதனையடுத்து ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் பல விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி காட்டி ஆர்பாட்டம் நடத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். சட்டசபையில் தமிழ்நாடு என்று உச்சரிக்காமல் விட்ட ஆளுநருக்கு எதிராக வலிமையான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டன. ஆளுநருக்கு எதிராக தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. கிடப்பில் போடப்பட்ட சட்ட மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாக கருதப்படும் என்று ஆளுநர் சொன்னதும் சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து கடந்த வாரம் ஆளுநருக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. சமூக வலைத்தளங்களில் கெட் அவுட் ரவி என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆனது.

இந்தநிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ராமநாதபுரம் மாவட்டம் சென்றுள்ளார். அங்கே மண்டபத்தில் அமைந்துள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களுடன் பேசினார். அப்போது பேசிய அவர், மாணவர்கள் செல்போன்களில் நேரத்தை கழிப்பதை தவிர்த்து பாடத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். நம் நாட்டில் விளையாட்டில் சாதித்தால் வாழ்வில் ஒளிரலாம். மாணவர்கள் மனதை ஒருமுகபடுத்த யோகாசனம் செய்யுங்கள் என தெரிவித்த அவர், நான் வகிக்கும் பதவியில் எப்போது சலிப்பு ஏற்படுகிறதோ அப்போது நான் வேலையில் இருந்து விலகிவிடுவேன் என்று தெரிவித்தார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி நாளைய தினம் இமானுவேல் சேகரனார் மற்றும் முத்துராமலிங்க தேவர் நினைவிடங்களில் ஆளுநர் அஞ்சலி செலுத்துகிறார். ராமநாதபுரம் மாவட்டம் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக சிபிஐ, மார்க்சிஸ்ட், காங்கிரஸ், மதிமுக. விசிக உள்ளிட்ட கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். ஆளுநர் வருகையை முன்னிட்டு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.