இந்தியா- ரஷ்யா உறவு நிலையானது: அமைச்சர் ஜெய்சங்கர்

உலகளாவிய உறவுகளில் இந்தியா – ரஷ்யா இடையேயான உறவானது நிலையானது என்று வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா-உக்ரைன் இடையே போர் தொடங்கி ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகின்றது. எனினும் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ரஷ்யாவின் துணை பிரதமர் டெனிஸ் மென்டுரோ 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் துணை பிரதமர் டெனிஸ் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:-

ரஷ்யாவின் வளங்களும், தொழில்நுட்பமும் இந்தியாவின் வளர்ச்சிக்கு சக்திவாய்ந்த பங்களிப்பை வழங்க முடியும். பல்வேறு துறைகளில் இரு நாட்டின் ஈடுபாட்டை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. உலகளாவிய உறவுகளில் இந்தியா-ரஷ்யா உறவானது நிலையான ஒன்றாகும். இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தக ஏற்றத்தாழ்வு அவசர அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.