சென்னை லூப் சாலை போராட்டத்திற்கு சீமான் நேரில் ஆதரவு!

லூப் சாலையில் மீனவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த சீமான், ஓபிசி இடஒதுக்கீடு குறித்த கேள்வியால் கோபமடைந்தார்.

சென்னை லூப் சாலை ஓரத்தில் மீனவர்கள் நடத்தி வந்த கடைகளை, ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இதற்கான நடவடிக்கைகளை போலீசார் முடுக்கி விட்டனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது:-

இங்கு வெறும் குடையை வைத்து கொண்டு மீன் விற்கும் கடைகளை மக்கள் நடத்தி வருகின்றனர். அருகில் தான் கடல், அதிலிருந்து படகுகள் மூலம் கொண்டு வரப்படும் மீன்கள் இங்கு தான் இருக்கின்றன. இந்த இடத்தில் கடைகள் போடப்பட்டுள்ளன. இதை காலி செய்ய வேண்டிய தேவை எங்கு வந்தது? நான் கடற்கரையில் மீன் விற்கக் கூடாது என்றால், கடலுக்குள் நீங்கள் பேனா வைக்கலாமா என்றால் அதற்கு பதில் இருக்கிறதா?

கடலோரத்தில் மீனவர்கள் கடை போடக் கூடாது என்று சொன்ன நீதிமன்றம் தான், சமாதியை வைத்து கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கியது. எங்களின் வாழ்வாதாரமே இங்கு தான் உள்ளது. இதை விட்டு விட்டு மீன் சந்தை கட்டி தருகிறோம் என்றால் எங்கே? எப்போது? பேனா சின்னம் அமைப்பதில் காட்டும் ஆர்வத்தை ஏன் எங்களுக்கு சந்தை கட்டுவதில் காட்டவில்லை. எங்களின் வாழ்விடத்திற்கு அருகில் சந்தை இருந்தால் தான் மீன்களை கொண்டு வந்து விற்க எளிதாக இருக்கும். அதை விட்டு விட்டு தொலைதூரத்தில் கட்டி கொடுத்தால் போக்குவரத்து செலவிற்கு காசை கொடுத்து விட்டு வெறுங்கையை வீசிக் கொண்டு வர வேண்டியது தான். இந்த மக்கள் மீன் விற்பதால் யாருக்கு என்ன இடையூறு வந்தது என்று சொல்லுங்கள்.

வட மாநில தொழிலாளர்கள் பாவம். பிழைத்து கொள்ளட்டும் என்று சொன்னவர்கள், நம்முடைய மக்களுக்காக கொஞ்சம் இறங்கி வாருங்கள். ஏன் யாருமே வரவில்லை. மாண்புமிகு நீதியரசர் இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நீதி கிடைக்காவிட்டால் நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கு தொடரப்படும். மனிதர்களின் உணவுத் தேவையில் 33 சதவீதம் கடலும், அங்குள்ள மீன்களும் தான் நிர்ணயம் செய்கிறது. மிகப்பெரிய விவசாயம் கடல் விவசாயம் தான். இதில் ஈடுபடும் எங்கள் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் நடந்து கொள்வது நல்ல ஆட்சியாளர்களின் செயல் அல்ல என்று கூறினார்.

இதையடுத்து அருந்ததியர், ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ஓபிசிக்கு நீங்கள் என்ன கொடுத்தீர்கள்? கர்நாடகாவில் ஒன்னே கால் கோடி இருக்கிறேன். மகாராஷ்டிராவில் 26 லட்சம் உள்ளேன். ஆந்திராவிலும் தான். தமிழ்நாட்டில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறதா இல்லையா? நான் கேட்பதற்கு பதில் சொல்வாயா? மாட்டாயா? ‘ஏய்’ என சீமான் கூறினார். அதற்கு செய்தியாளர் ‘ஏய்’ என்று சொல்லக் கூடாது என்றார். அப்படியெனில் ‘ஓய்’ எனச் சொல்லட்டுமா? போடா எனக் கூறிவிட்டு சீமான் புறப்பட்டு சென்றார்.