கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு: பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!

கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தின் மீது பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேசினார். அதனை அவை குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கியதை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

கிறிஸ்தவர்களாக மாறிய ஆதிதிராவிடர்களுக்கு இட ஒதுக்கீடு வழக்கும் தீர்மானத்தின் போது வானதி பேசியுள்ளார். மத்திய அரசு சார்பில் ஆணையம் அமைக்கப்பட்டதாகவும், நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும் வானதி பேசினார். இதனையடுத்து நீதிமன்றம் சட்டமன்றத்தை கட்டுப்படுத்தாது என பாஜகவின் வானதி சீனிவாசனுக்கு சபாநாயகர் பதில் அளித்துள்ளார். சட்டசபையின் அவைக்குறிப்பில் இருந்து வானதி சீனிவாசன் பேசிய சில கருத்துக்களை சபாநாயகர் அப்பாவு நீக்கியதை கண்டித்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியதாவது:-

மதம் மாறிய பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் அரசின் இட ஒதுக்கீட்டினை ஆராய்ந்ததற்காக பிரதமர் மோடி அவர்கள் கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். அந்த குழு இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என அவர்களுக்கு அந்த உரிமை கிடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அதனுடைய விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூலை மாதம் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இது தொடர்பான விசயங்களை செய்து வரும் போது நீதிமன்ற வரம்பிற்குள் உள்ள போது எதற்காக இந்த தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற கேள்வியை பாஜக முன்வைக்கிறது.

அது மட்டுமல்ல கிறிஸ்தவத்திற்கும், இஸ்லாமியத்திற்கும் மதம் மாறினாலும் பட்டியலின மக்களுக்கு தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது என்பதை இந்த தீர்மானம் மறைமுகமாக சொல்ல வருகிறதா? என்று நாங்கள் முதல்வரிடம் கேள்வி எழுப்பினோம். இம்மாதிரியாக பட்டிலின மக்களை பாதுகாக்க சமூக நீதி அரசாக செயல்படுவதாக கூறும் திமுக அரசு, வேங்கை வயல் சம்பவம், பட்டியல் இன மக்களின் பஞ்சமி நிலத்தை மீட்கும் சிறப்பு சட்டம், கவுரவ கொலைகள் ஒவ்வொரு வாரமும் நிகழ்கிறது அதை தடுப்பதற்கான சட்டம் என இவற்றைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருப்பதாக கருதுகிறது. எனவே முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளி நடப்பு செய்கிறது. இன்றைக்கும் பட்டியலின மக்களுக்காக தனி சமாதி கிடையாது. பட்டியலின மக்களை ஏமாற்றுவதற்காகவே இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருகின்றனர். இவ்வாறு வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.