பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ குறித்து ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் வைரல் ஆடியோ குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் டுவீட் போட்டுள்ளார்.

தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் டெல்லி செய்தியாளரிடம் செல்போனில் பேசுவதை போன்ற ஆடியோ இணையத்தில் கடும் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில், திமுக ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் உதயநிதி ஸ்டாலினும், மருமகன் சபரீசனும் அவர்களது மூதாதையரை விட அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். 10 கோடி 20 கோடி என சிறுக சிறுக ஓராண்டில் மட்டும் தோராயமாக 30 ஆயிரம் கோடி இருக்கும். இப்போது அது பிரச்சினையாக இருக்கிறது. இதை எப்படி கையாளுவது? எப்படி மாட்டிக்கொள்ளாமல் இருப்பது? என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும் குரலில் பதிவாகியுள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் திமுகவின் சொத்து பட்டியலை பகிரங்கமாக வெளியிட்டார். ஒட்டுமொத்தமாக அந்த பட்டியலில் சொத்துமதிப்பானது ரூ.1,34,317 கோடி என கூறப்பட்டுள்ளது. இந்த பட்டியல் சாமானியர்களை வியக்க வைத்த நிலையில் அது வெறும் 10 சதவீதம் தான் என அரசியல் விமர்சகர்கள் அதிர்ச்சி கொடுக்கின்றனர். மேலும், திமுக மற்றும் அமைச்சர்களின் சொத்து மதிப்பை அடுத்த வீடியோவில் வெளியிடுவேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

இதற்கு மத்தியில், பழனிவேல் தியாகராஜன் பேசியதான ஆடியோ வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை பாஜகவினர் பரவலாக ஷேர் செய்து அரசியல் அரங்கில் முக்கிய கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இந்த நிலையில், கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அந்த ஆடியோ பதிவை டுவிட்டரில் ஷேர் செய்து முதல்வர் ஸ்டாலினிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

வானதி சீனிவாசன் பதிவிட்டுள்ள டுவீட்டில், தமிழக முதல்வரின் குடும்பத்தினர் உதயநிதி ஸ்டாலின் ஒரு வருடத்தில் 30,000 கோடி ரூபாய் குவித்துள்ளதாக தமிழக நிதியமைச்சர் பேசுவதாக கூறும் ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இது குறித்து முதல்வர் விளக்கமளிக்கவேண்டும் என்று கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதம் நடந்து வரும் நிலையில் இந்த ஆடியோ விவகாரம் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக மாறியுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்படலாம் என்றும் பார்க்கப்படுகிறது.