நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் நோட்டிஸ்!

அவதூறு பரப்பியதற்காக 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலைக்கு உதயநிதி ஸ்டாலின் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது முதலே திமுகவை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். அதேபோல் திமுகவினர் ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி வந்த அண்ணாமலை, முக்கிய தலைவர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். இந்த சூழலில் கடந்த 14ம் தேதி ஊழல் பட்டியலுக்கு பதிலாக திமுகவினர் 12 பேரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதையடுத்து பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் திமுக எம்.பி. வில்சன் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

‘டிஎம்கே ஃபைல்ஸ்’ (Dmk Files) என்ற தலைப்பில் 15 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் திமுக மீது தவறான, ஆதாரமற்ற, அவதூறான, கற்பனையான பல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளீர்கள். திமுகவின் சில சொத்துகளின் மதிப்பை உயர்த்தி, சம்பந்தம் இல்லாத சொத்துகள் உள்ளிட்டவற்றின் மூலம் திமுகவுக்கு மொத்தம் ரூ.1,408.94 கோடி சொத்து இருப்பதாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. உங்கள் பேச்சு, குற்றச்சாட்டுகளுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள், இணையதளத்தில் இதுதொடர்பான வீடியோவை நீக்கவேண்டும். இழப்பீட்டுத் தொகையாக ரூ.500 கோடி வழங்க வேண்டும். அது முதல்வர் பொது நிவாரண நிதிக்கு செலுத்தப்படும். இந்தஅறிவிப்பு கிடைத்த 48 மணி நேரத்துக்குள் இவற்றை செய்ய தவறினால், உங்களுக்கு எதிராக சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும் என அந்த நோட்டிஸில் கூறப்பட்டிருந்தது.

அதற்கு அண்ணாமலையும் எதிர்வினை ஆற்றி இருந்தார். திமுகவினரை சட்டப்படி எதிர்கொள்ள தயார் என அவர் கூறினார். மேலும் இது குறித்து சிபிஐ-யிடம் அண்ணாமலை புகார் அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் பரவின. அதேபோல் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் 1,023 கோடி சொத்து இருப்பதாக அண்ணாமலை கூறியிருந்தார். அது எங்கு இருக்கிறது என்று அண்ணாமலை விளக்கினால், அந்த சொத்துக்களை விற்று தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் புத்தகம் வாங்கி கொடுக்கிறேன் என அமைச்சர் கூறினார்.

இந்த சூழலில் திமுக அவதூறு பரப்பிய அண்ணாமலை மீது வழக்கு தொடர உள்ளதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் உதயநிதி ஸ்டாலினும் அண்ணாமலைக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார். உதயநிதி சார்பில் திமுக எம்பியும், வழக்கறிஞருமான ரிச்சர்ட்சன் வில்சன் அனுப்பிய நோட்டீஸில், ‘‘உதயநிதி மீது ஆதாரமற்ற உண்மைக்கு புறமான பொய்யான குற்றச்சாட்டுகளை கூறிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். உதயநிதிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 50 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். அண்ணாமலை கூறியபடி நோபல் ஸ்டீல் நிறுவனத்தில் உதயநிதி எந்த காலத்திலும் இயக்குநராகப் பணியாற்றியது இல்லை. 48 மணிநேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.