கோடநாடு வழக்கை வைத்து எங்களை பயமுறுத்த முடியாது: எடப்பாடி பழனிசாமி

கோடநாடு வழக்கை வைத்து எங்களை பயமுறுத்த முடியாது; மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறை ரீதியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடந்து வருகிறது. அந்தவகையில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்துப் பேசினார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது, தூத்துக்குடியில் 100 நாட்கள் போராட்டம் நடந்தபோது போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அப்போதைய முதல்வர் ஏன் அழைத்துப் பேசவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, 144 தடை உத்தரவு போடப்பட்ட பிறகும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், தடையை மீறி நடந்த போராட்டத்தில் திமுக எம்எல்ஏ பங்கேற்றதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பொள்ளாச்சி, கோடநாடு விவகாரங்களில் திமுக ஆட்சி அமைந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஒவ்வொரு ஆட்சி நடைபெறும் போதும் தவறுகள் நடக்கும்தான். ஆனால் சம்பவங்கள் நடைபெறுகின்ற நேரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் ஆட்சி இந்த ஆட்சி என்றார்.

மேலும், பொள்ளாச்சி வழக்கு என்ன ஆச்சு? என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? நாங்கள் வந்து தான் இப்போது நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். கோடநாடு வழக்கு என்ன ஆச்சு? அதற்கும் நாங்கள் தான் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தொடர்ந்து கோடநாடு விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விசாரணை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்தார். முன்னாள் முதல்வர் இருந்த பங்களாவில் நடைபெற்ற விவகாரம் என்பதால் இது சாதாரண விவகாரம் அல்ல என்றும், மிகுந்த கவனத்தோடு விசாரணை நடத்தி, கொடநாடு வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை வாங்கி தருவோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “கோடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளோம். கோடநாடு வழக்கில் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்தது அதிமுக அரசு. 90% வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கோடநாடு வழக்கை எதற்காக சிபிசிஐடிக்கு மாற்றினீர்கள்? கோடநாடு பங்களா ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா இல்லை. அது வேறு ஒருவருடையது. முதலமைச்சரின் பதில் விசித்திரமாக உள்ளது. கோடநாடு பங்களா யாருடையது என்பதை விசாரித்துக் கொள்ளுங்கள். கோடநாடு வழக்கை வைத்து எங்களை பயமுறுத்த முடியாது; மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை” எனத் தெரிவித்தார்.