போதை பொருளை அடியோடு ஒழிப்போம்; இளைஞர்களின் எதிர்காலத்தை காப்போம் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சட்டசபையில் நேற்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் இறுதியாக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
எடப்பாடி பழனிசாமி:- சென்னை விருகம்பாக்கத்தில் தி.மு.க. பெண் எம்.பி.க்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்திலேயே ஆளுங் கட்சியை சேர்ந்த ஒருவர் காவலுக்கு நின்ற பெண் காவலரிடம் அத்துமீறி நடந்து கொண்டது ஏற்புடையது அல்ல. இந்த குற்றச் சம்பவம் குறித்து நான் அறிக்கை வெளியிட்ட பிறகுதான், கண் துடைப்பாக அவர்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வருகின்றனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- அந்த செய்தி கிடைத்த அடுத்த வினாடி அந்த நபர் கைது செய்யப்பட்டார். கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார். அபாண்டமான குற்றச்சாட்டு (தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நாகர்கோவிலில் நடந்த சம்பவம் குறித்து பேசினார்)
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- சமூக ஊடகங்களில் வந்ததை எல்லாம் ஆதாரமாக வைத்து பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. இது அபாண்டமான குற்றச்சாட்டு.
எடப்பாடி பழனிசாமி:- எதிர்க்கட்சி எப்படி ஆதாரத்தை வைத்துக்கொண்டு பேச முடியும். அரசாங்கம் எங்களிடமா உள்ளது.
அமைச்சர் சேகர்பாபு:- எதிர்க்கட்சி தலைவர் அதிகம் உணர்ச்சி வசப்படுகிறார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ‘வெடிகுண்டாக மாறுவேன்’ என்றார். அவர் மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சி தலைவர் கூறலாம்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- நாங்களும் எதிர்க்கட்சியாக இதேபோல் பேசியபோது, எங்களிடம் ஆதாரம் கேட்டீர்கள். எனவே, ஆதாரத்தை தாருங்கள். நடவடிக்கை எடுக்கிறோம். (இந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி சில படங்களை காட்டி, முதியவர்கள் கொலை செய்யப்படுவது குறித்து சில கருத்துகளை தெரிவித்தார். அது அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது) எடப்பாடி பழனிசாமி:- கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. அதை தடுக்க முடியவில்லை. எதிர்காலத்தில் மோசமான நிலையை ஏற்படுத்திவிடும். எனவே, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- கஞ்சா, குட்காவைப் பற்றி பேச ஆரம்பித்தால் எந்த நிலைமைக்கு போகும் என்பதை இந்த அவையில் இருக்கக்கூடிய எல்லோரும் அறிவார்கள். போதைப் பொருட்களின் பிடியில் இந்த மாநிலத்தை விட்டுச்சென்றது உங்கள் ஆட்சியில்தான். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு போதைப்பொருள் நடமாட்டத்தை ஒழிக்க பல தீவிர நடவடிக்கைகள் நாங்கள் எடுத்திருக்கிறோம். அ.தி.மு.க. ஆட்சியில் 2020-ல் பதிவான வழக்குகள் 40 ஆயிரத்து 246. ஆனால் தி.மு.க. ஆட்சியில் இதுவரை பதிவான வழக்குகள் 63 ஆயிரத்து 656 வழக்குகள். அ.தி.மு.க. ஆட்சியில் கைது செய்யப்பட்டவர்கள் 37 ஆயிரத்து 846. தி.மு.க. ஆட்சியில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 65 ஆயிரத்து 480 பேர். 2020-ல் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அ.தி.மு.க. ஆட்சியில் 1 லட்சத்து 22 ஆயிரம் கிலோ. ஆனால் தி.மு.க. ஆட்சியில் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் 3 லட்சத்து 37 ஆயிரத்து 295 கிலோ. 2016 அ.தி.மு.க. ஆட்சியில் இருந்து எடுத்துக் கொண்டால் 2020-ல் என்.டி.பி.எஸ். சட்டத்தின்கீழ் போடப்பட்ட வழக்குகள் 5 ஆயிரத்து 403 மட்டும். ஆனால் தி.மு.க. ஆட்சியில், 2022-ல் மட்டும் 10 ஆயிரத்து 391 வழக்குகள். அதாவது இருமடங்காக போடப்பட்டு போதைப் பொருட்களை ஒழிப்பதில் தீவிரத்தை நாங்கள் காட்டியிருக்கிறோம். கடந்த 6 வருடங்களில் அதிக எண்ணிக்கையில் போடப்பட்ட வழக்கு 2022-ல் தான். அதுவும் தி.மு.க. ஆட்சியில்தான்.
அதேபோல் இச்சட்டத்தின்கீழ் அ.தி.மு.க. ஆட்சியில் 2020-ல் 15 ஆயிரத்து 313 கிலோ கஞ்சாவும், 1 கிலோ 896 கிராம் கெராயினும், 527 வாகனங்களும் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் தி.மு.க. ஆட்சியில் 2022-ல் மட்டும் 27 ஆயிரத்து 140 கிலோ கஞ்சா, 22 கிலோ 58 கிராம் கெராயின், 1,242 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி போதைப் பொருள்கள் விற்போரின், விநியோகிப்போரின் 5 ஆயிரத்து 723 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு மாவட்ட ஆய்வின்போதும், கள ஆய்வின்போதும் இந்த நடவடிக்கைகளை நான் துரிதப்படுத்திக்கொண்டிருக்கிறேன். காவல்துறையினர் இவ்வளவு நேர்மையாக நடவடிக்கை எடுத்து வருகின்ற நேரத்தில் ஒரு சில ”கருப்பு ஆடுகள்” காவல்துறையில் இருப்பதை, நமது காவல்துறை அதிகாரிகள் களையெடுத்து வருகிறார்கள்.
போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிட இரவு-பகல் பாராமல் காவல்துறையினர் பணியாற்றி வருவது இந்த ஆட்சியில்தான். இதைவிட வெட்கக்கேடு என்ன என்று கேட்டால், அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர்கள், டி.ஜி.பி., கமிஷனர் மற்றும் போலீஸ் அதிகாரிகளாக இருந்தவர்கள், அவர்கள் மீது சி.பி.ஐ.யை வழக்குத் தொடுக்கக்கூடிய அளவிற்கு குட்கா நடமாட்டம் தலைவிரித்தாடியது அதை மறந்துவிட்டு பேசக்கூடாது. சமீபத்தில்கூட முன்னாள் டி.ஜி.பி., முன்னாள் போலீஸ் கமிஷனர் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது, நீங்கள் பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள். அ.தி.மு.க. ஆட்சியில்தான் போதைப் பொருட்களின் மாநிலமாக தமிழ்நாட்டை விட்டுச் சென்றீர்கள். நிதி நெருக்கடியை சீரமைத்தது போல், இந்த நிர்வாகச் சீரழிவை சரி செய்வது எங்கள் கடமையாக வந்திருக்கிறது. போதைப்பொருட்களின் நடமாட்டத்தையும் அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுத்திருப்பது இந்த அரசுதான். ”போதைப் பொருட்களை நிச்சயமாக அடியோடு ஒழிப்போம். இளைஞர்களின் எதிர்காலத்தை காப்போம்” இது திராவிடமாடல் அரசு. இவ்வாறு விவாதம் நடந்தது.