திமுக தலைவர்களின் சொத்துப்பட்டியல் என்று அண்ணாமலை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் இப்போது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பியும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை திமுகவினர் சொத்து பட்டியல் என்று கூறி ஒன்றை வெளியிட்டார். அதில் திமுகவினர்தலைவர்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. மேலும், இது அவர்களின் சொத்து பட்டியல் என்று சொன்ன அண்ணாமலை, இது திமுகவினர் ஊழல் பட்டியல் இல்லை என்றும் அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்றும் கூறியிருந்தார். இதற்கிடையே திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ரூ.500 கோடி இழப்பீடு வழங்காவிட்டால் சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில், “உங்கள் பேச்சு, குற்றச்சாட்டுகளுக்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள், இணையதளத்தில் இதுதொடர்பான வீடியோவை நீக்கவேண்டும். இழப்பீட்டுத் தொகையாக ரூ.500 கோடி வழங்க வேண்டும். அது முதல்வர் பொது நிவாரண நிதிக்குச் செலுத்தப்படும். இதைச் செய்யத் தவறினால், உங்களுக்கு எதிராக சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும்” என்று அதில் இருந்தது.
இருப்பினும், அண்ணாமலை அதற்குப் பதில் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். ரூ.500 கோடி இழப்பீடு கேட்ட திமுகவிடம் 500 கோடியே 1 ரூபாய் நான் கேட்கிறேன் என்று கூறியிருந்தார்.
அதேநேரம் திமுகவினர் அத்துடன் இதை விடவில்லை. திமுக அமைச்சர் உதயநிதி சார்பிலும் அண்ணாமலைக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டது. உதயநிதி மீது ஆதாரமற்ற உண்மைக்குப் புறமான பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், உதயநிதிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 50 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அண்ணாமலை கூறியபடி நோபல் ஸ்டீல் நிறுவனத்தில் உதயநிதி எந்த காலத்திலும் இயக்குநராகப் பணியாற்றியது இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும், 48 மணிநேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் எனத் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில் திமுக பொருளாளரும் திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலுவும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளார். அவர் சார்பிலும் அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்ட அண்ணாமலை 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் 48 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.