தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: அரவிந்த் கெஜ்ரிவால்

தேசிய தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞரை போல வந்து மர்மநபர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பெண் உட்பட இருவர் காயமடைந்தனர். டெல்லியில் உள்ள சாகேத் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடந்துள்ளது. வழக்கறிஞர் போல உடை அணிந்து வந்த நபர் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. 4 முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இதில் அங்கிருந்த வழக்கறிஞர் மற்றும் பெண் ஒருவர் காயமடைந்தனர். அவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்தனர். அவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா என்றும் தாக்குதல் நடத்தியவர் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில், டெல்லியில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. பிறர் பணிக்கு இடையூறு ஏற்படுத்தாமல், ஒவ்வொரு விஷயத்திலும் கேவலமான அரசியலில் ஈடுபடாமல் ஒவ்வொருவரும் அவரவர் பணியில் கவனம் செலுத்த வேண்டும். அதை சரியாக செய்யமுடியாவிட்டால் பதவி விலகுங்கள். மற்றவர்களைச் செய்ய விடுங்கள். மக்களின் பாதுகாப்பை வாய்ப்பாக விட்டுவிட முடியாது என்று டுவீட் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து, தலைநகர் முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் பாதுகாப்பு குறித்து வழக்குரைஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.