தி.மு.க. ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரித்தால் உண்மை வெளியே வரும்: அண்ணாமலை

தி.மு.க.,வின் ஊழல் குறித்து சி.பி.ஐ., விசாரித்தால் உண்மை வெளியே வரும் என தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கூறினார்.

பெங்களூருவில், ஆங்கில டிவி சேனல் ஏற்பாடு செய்த கூட்டத்தில் அண்ணாமலை கூறியதாவது:-

தி.மு.க., பண மோசடியில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் ஊழலை, தமிழக நிதியமைச்சர் வெளிப்படுத்தி உள்ளார். சி.பி.ஐ., விசாரித்தால் உண்மை வெளிவரும். திமுக.,வின் ஊழல் வழிகளை அம்பலப்படுத்தி உள்ளேன். அக்கட்சியின் பெரிய தலைகள் சிறை செல்வார்கள். திராவிடத்தை திமுக., தவறாக பயன்படுத்தி வருகிறது. திமுக ஊழல் அரசை நடத்தி வருகிறது.

பா.ஜ.க. ஆட்சியில் ஹிந்தி மொழி திணிக்கப்படவில்லை. அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பிரதமர், அனைத்து மொழிகளையும் விரும்புகிறார். அவரை நான் முதலில் சந்தித்த போது, தமிழில் பேசும்படி அறிவுறுத்தினார். ஹிந்தி தாய் மொழியாக இல்லாத குஜராத்தில் இருந்து வந்துள்ள பிரதமர் மோடி, பிராந்திய உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதனால், நாட்டிற்கு தேவையானதையும், பிராந்திய உணர்வுகளுக்கு தேவையானவற்றையும் செய்கிறார்.

தேசிய எண்ணங்களுடன், பிராந்திய உணர்வுகளை மதித்து வருகிறோம். தமிழகத்தில், வடக்கு தெற்கு, ஹிந்து தமிழகம், ஆரியன், திராவிடர் என கதை சொல்கின்றனர். ஜல்லிக்கட்டு பிரச்னை முதல் நீட் விவகாரம் வரை இதையே தான் சொல்கின்றனர். இதை கேட்டு கேட்டு மக்கள் அழுத்துவிட்டனர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இதனை கொண்டு செல்ல முடியாது. மாநில கட்சிகள் குடும்ப கட்சிகளாக மாறியுள்ளன. முதல்வர் குடும்பத்தில் 3 அல்லது 5 பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல் சாசன பதவிகளை வகித்து வருகின்றனர். தமிழகத்தில் 14 குடும்பத்தை சேர்ந்த 3-ம் தலைமுறையினர் அதிகாரத்தில் உள்ளனர்.

கலாசார உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. கர்நாடக சட்டசபை தேர்தலில் 130 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க வெற்றி பெறும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.