உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவின் போர் விமானங்கள் தவறுதலாக சொந்த நாட்டின் மீதே குண்டு வீசியதால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது.
உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா அந்த நாட்டின் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. இந்த சண்டை ஓராண்டை கடந்து விட்ட போதிலும் இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. தொடர்ந்து ஆக்ரோஷமாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. சிறிய நாடுதானே எளிதில் கைப்பற்றி விடலாம் என்ற மிதப்புடன் இருந்த ரஷ்யாவிற்கு உக்ரைன் கடும், சவால் அளித்தது. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதி ஆயுத உதவியும் அளிப்பதால் ரஷ்யாவை எதிர்த்து முழு வீச்சுடன் சண்டைடியிட்டு வருகிறது. இதனால் , ரஷ்யாவின் திட்டம் இன்னும் பலிக்கவில்லை. உக்ரைனின் சில பகுதிகளை கைப்பற்றினாலும் போரில் குறிப்பிடத்தக்க வெற்றியை ரஷ்யாவால் பெற முடியவில்லை. உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட ஆதரவு நாடுகளின் தலைவர்கள் நேரடியாகவே சென்று ஆதரவு அளித்து வருகின்றனர். உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் அவையிலும் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என்று வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. போரினால் ஏற்றுமதி இறக்குமதி போன்றவை பாதிக்கப்பட்டு உலக பொருளாதாரத்திலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் நிறுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் இந்த சண்டை நீடித்துக் கொண்டே செல்கிறது.
தற்போது உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பதிலுக்கு உக்ரைனும் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் , ரஷ்யா தனது சுகோய் 34 போர் விமானம் உக்ரைனுக்குள் குண்டு மழை வீச திட்டமிட்டு இருந்தது. ஆனால், தவறுதலாக இந்த குண்டுகள் உக்ரைன் எல்லையில் இருக்கும் ரஷ்ய நகரங்கள் மீது விழுந்தது. உக்ரைன் – ரஷ்யா பார்டரில் இருக்கும் பெல்கோரட் என்ற நகரத்தில் தான் இந்த குண்டுகள் விழுந்தன. பலத்த சத்தத்துடன் விழுந்த குண்டுகளால் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம் அடைந்தனர். அதேபோல், ஒரு கார் வெடித்து சிதறியது. ஒரு கடையின் மேற்கூரையும் முற்றிலும் உருக்குலைந்தது. குண்டு விழுந்த இடத்தில் 20 மீட்டர் அளவுக்கு பெரிய பள்ளமும் ஏற்பட்டது. ரஷ்ய போர் விமானம் வீசிய குண்டு தவறுதலாக விழுந்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர். குண்டு விழுந்ததின் தாக்கத்தால் மேலும் பல வீடுகள் சேதம் அடைந்தன. தவறுதலாக இந்த தாக்குதல் நடந்து விட்டதாக விளக்கம் அளித்த ரஷ்யா, உரிய விசாரணை நடப்பதாகவும் தெரிவித்துள்ளது. சொந்த நாட்டின் மீதே குண்டு வீசியது ரஷ்யாவிற்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. அதேவேளையில், அந்த நகர மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.