ஐபிஎல் புகழ் லலித் மோடிக்கு எதிராக இப்போது பல்வேறு வழக்குகள் நடந்து வரும் நிலையில், ஒரு வழக்கை சுப்ரீம் கோர்ட் இப்போது முடித்து வைப்பதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் இப்போது ஐபிஎல் போட்டிகள் எந்தளவுக்குப் பிரபலமாக உள்ளது என்று தனியாகச் சொல்லத் தேவையில்லை. இந்திய கிரிக்கெட்டில் ஐபிஎல் இப்போது பிரிக்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடருக்காகவே காத்திருக்கும் கிரிக்கெட் ரசிகர்களும் இருக்கிறார்கள். இந்தாண்டும் ஐபிஎல் போட்டிகள் வெகு சிறப்பாக நடந்து வருகிறது. ஐபிஎல் போட்டிகளை முதலில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்க காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் லலித் மோடி. இவர் உருவாக்கிய ஐபிஎல் போட்டிகள் தான் இப்போது உலகளவில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. தொடக்கத்தில் ஐபிஎல் சீசன்களை இவர் தான் நடத்தி வந்தார். இருப்பினும், 2010இல் கொச்சி அணிக்கு அனுமதி கொடுத்தது உட்பட பல விவகாரத்தில் இவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. பண மோசடி உள்ளிட்ட பல குற்றங்களில் இவர் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. இந்தச் சூழலில் தான், இந்தியாவில் இருந்தால் கைது செய்யப்படலாம் என்று அஞ்சி இவர் லண்டனுக்குத் தப்பிச் சென்றார். இப்போது லலித் மோடி லண்டனிலேயே வசித்து வருகிறார். அவர் குறித்த பல வழக்குகள் இன்னும் இந்தியாவில் நிலுவையில் உள்ளன. இதனால் அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சிகளும் ஒரு பக்கம் நடந்து வருகிறது.
இதனிடையே இப்போது அவர் மீதான வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட் முடித்துள்ளது. லலித் மோடி மன்னிப்பு கேட்பதால் வழக்கை முடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் முன்னாள் கமிஷனர் லலித் மோடி, சமூக வலைத்தளங்களில் இந்திய நீதித்துறைக்கு எதிராகக் கருத்து கூறியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதையடுத்து, அவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. நீதிமன்றங்கள் அல்லது இந்திய நீதித்துறையின் மகத்துவம் அல்லது கண்ணியத்திற்கு முரணாக எந்தவொரு கருத்தையும் எதிர்காலத்தில் சொல்ல மாட்டேன் என்று லலித் மோடி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். இதை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்றுக் கொண்டதாக அறிவித்தனர்.
நீதிபதிகள் மேலும் கூறுகையில், “அவரது நிபந்தனையற்ற மன்னிப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எதிர்காலத்தில் இந்திய நீதித்துறை மற்றும் நீதிமன்றங்களின் நற்பெயரைக் களங்கப்படுத்த முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறோம். அவரது நிபந்தனையற்ற மன்னிப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம், ஏனெனில் நீதிமன்றம் எப்போதும் மன்னிப்பை நம்புகிறது. அனைவரும் நீதித்துறையை மதிக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்” என்றார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, லலித் மோடியின் கருத்துகளைக் கடுமையாக விமர்சித்தது. செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்குமாறு அவருக்கு உத்தரவிட்டது. லலித் மோடி சட்டத்திற்கும் மேலானவர் இல்லை என்றும் அவர் மீண்டும் இதுபோல கருத்துகள் கூறினால், கடும் நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறியிருந்தனர். இந்திய நீதித்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில், எதிர்காலத்தில் இதுபோன்ற பதிவுகளை கூற மாட்டேன் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த நிலையில், அதை ஏற்று இப்போது சுப்ரீம் கோர்டை வழக்கை முடித்து வைத்துள்ளது.