கர்நாடகாவில் இஸ்லாமியர்களின் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்துக்கு மே 9 வரை தடை!

கர்நாடகாவில் இஸ்லாமியர்களின் 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து என்ற முடிவை மே 9 வரை அமல்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசின் முடிவை மே 9ம் தேதி வரை அமல்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கக்கூடிய சூழலில் அந்த மாநிலத்தின் மிக முக்கியமான விவாத பொருளாகவும் அரசியல் பேசு பொருளாகவும் இருக்கக்கூடியது தான் இஸ்லாமியர்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து விவகாரம் . பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்க கூடிய சூழலில் சில மாதங்களுக்கு முன்பாக இந்த இட ஒதுக்கீடை ரத்து செய்து அம்மாநில அரசு மிக முக்கியமான உத்தரவை பிறப்பித்தது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டபோது கர்நாடக சட்டமன்ற தேர்தல் என்பதும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து தற்காலிகமாக இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை அமல்படுத்துவதை தாங்கள் நிறுத்தி வைப்பதாக கர்நாடக அரசு தெரிவித்தது.

அதன்படி வழக்கு விசாரணையில் தொடர்ச்சியாக இருக்கக்கூடிய சூழலில் இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மே 9ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்து. அதுவரை கர்நாடக அரசு இட ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான எந்த ஒரு முடிவையும் எடுக்கக்கூடாது எனவும் குறிப்பாக புதிய வேலை வாய்ப்புகளை வழங்குவது, பணி ஆணை வழங்குவது, போன்ற எதையும் செய்யக்கூடாது என்ற உத்தரவை பிறப்பித்தது. கர்நாடக அரசும் அதனை ஏற்று கொண்டது. தாங்கள் எந்த ஒரு நடவடிக்கையும் இட ஒதுக்கீடு ரத்து தொடர்பாக மேற்கொள்ளப்போவது இல்லை என்றும் கர்நாடக அரசு தெரிவித்தது.