வள்ளலாரின் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதானத்திற்கான அரசு மானியம் ரூ.3.25 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வழங்கினார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவருட்பிரகாச வள்ளலாரின் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனிடையே கடந்த 5.10.2022 அன்று நடைபெற்ற வள்ளலார் முப்பெரும் விழாவின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “வள்ளலார் 200” இலச்சினை, தபால் உறை மற்றும் சிறப்பு மலர் ஆகியவற்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து 52 வாரங்களுக்கான விழாக்களில் முதல் வார நிகழ்ச்சிகளையும், ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் நிகழ்வையும் தொடங்கி வைத்து, விழாப் பேருரை ஆற்றும்போது, “வள்ளலாரின் முப்பெரும் விழா 52 வாரங்களுக்கு பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் நான் ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்கு தெரிவிக்க விரும்புவது, ஓராண்டிற்கு தொடர் அன்னதானம், பேச்சாளர்களுக்கு சன்மானம் உள்ளிட்ட இந்த விழாவிற்கு 3 கோடியே 25 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது” என்று அறிவித்தார்.
அதன்படி, வள்ளலார் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதானம் செலவினத்திற்காக அரசு மானியமாக 3.25 கோடி ரூபாய்க்கான காசோலையை வள்ளலார் முப்பெரும் விழா குழு தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வழங்கினார். தமிழ்நாடு முழுவதும் வள்ளலாரின் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு தினந்தோறும் 150 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.