ஹிஜாப் தடை: கர்நாடகத்திலேயே முதலிடம் பிடித்த மாணவி தபசும் ஷேக்!

ஹிஜாப் தடைக்கு எதிராக கர்நாடக உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்த தபசும் ஷேக் என்ற மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்து இருக்கிறார்.

பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்., ஏபிவிபி, விஎச்பி, பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை கையில் எடுத்தனர். இதன் காரணமாக உடுப்பியில் உள்ள அரசு பியு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதனை ஏற்க மறுத்த இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாமல் பள்ளிக்கு வெளியே அமர வைக்கப்பட்டனர். இந்த மாணவிகளுக்கு ஆதரவாக கர்நாடகாவின் இதர பள்ளி மற்றும் கல்லூரிகளில் இஸ்லாமிய மற்றும் இடதுசாரி மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் குதித்தனர். மறுபக்கம் ஏபிவிபி உள்ளிட்ட இந்துத்துவ மாணவர் அமைப்பினரும் ஹிஜாபுக்கு எதிரான போராட்டங்கள் ஈடுபட்டனர். கர்நாடக மாநில பாஜக அரசு கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் ஆடைகளை அணியக்கூடாது என்றும் முழுமையாக சீருடையை பின்பற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் கர்நாடகாவின் குந்தபுராவில் உள்ள கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபி அமைப்பினர் காவித் துண்டு அணிந்து வகுப்புக்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகளை கல்லூரி நிர்வாகம் அனுமதிக்க மறுத்து அங்கிருந்து வெளியேற்றியது. இதனைக் கண்டித்து மாணவிகள் அங்கேயே போராட்டத்தில் குதித்தனர். இந்த பிரச்சனையும் போராட்டமும் மற்ற கல்லூரிகளுக்கும் பரவியது. இந்த நிலையில்தான் கர்நாடகாவில் இரு தரப்பினர் இடையே மத வன்முறை வெடித்தது. ஹிஜாப் அணிந்து செல்லும் மாணவிகளுக்கு ஆதரவாகவும், கர்நாடக அரசை கண்டித்தும் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப் தடை காரணமாக ஏராளமான இஸ்லாமிய மாணவிகள் பொதுத்தேர்வு எழுத செல்லவில்லை. ஹிஜாபுடன் தேர்வு எழுத சென்ற மாணவிகள் அனுமதிக்கப்படவும் இல்லை. இதனால், தேர்ச்சி விகிதமும் வெகுவாக குறைந்தது.

இந்த நிலையில், மறுபக்கம் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து செல்வதற்கு தடை விதிக்கும் கர்நாடக அரசின் உத்தரவை எதிர்த்து 6 மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் அரசு பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் எந்த தவறும் இல்லை என்று கூறி மாணவிகளின் வழக்கை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் கர்நாடக பியுசி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் ஹிஜாப் தடைக்கு எதிராக வழக்கு தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வரும் மாணவி தபசும் ஷேக் 600க்கு 593 மதிப்பெண்களை பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து உள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “அரசு உத்தரவின் காரணமாக ஹிஜாப் அல்லது கல்வி ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டி இருந்தது. என் பெற்றோர், ‘சரியான பாதை கல்விதான். இத்தகைய அநீதிகளை தடுக்கவும், நீ ஒரு நல்ல நிலையை எட்டவும், உன்னைபோல் மற்றவர்களை உயர்த்தவும் கல்வியே சரியான வழி’ என்று கூறினார். எனவே நான் கல்விக்காக கல்லூரியில் மட்டும் ஹிஜாபை துறந்தேன்” என்று தெரிவித்து இருக்கிறார்.