தூத்துக்குடியில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் பணியிலிருந்தபோது தாக்கப்பட்டு மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 53). இவர் நேற்று மதியம் தன்னுடைய அலுவலகத்தில் பணியில் இருந்தபோது அவரை இரண்டு நபர்கள் அரிவாளால் வெட்டினர். தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த லூர்து பிரான்சிஸ் அவசர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இவரைத் அரிவாளால் வெட்டிய ராமசுப்பு என்பவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளார். இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் ராமசுப்புவின் மீது கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அளித்த புகாரின் பேரில் கடந்த வாரம் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால், ஆத்திரம் அடைந்த ராமசுப்பு மற்றொரு நபரை அழைத்துக் கொண்டு அவரை வெட்டியுள்ளார். இதுகுறித்து, காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக டுவிட்டரில் குற்றம்சாட்டி இருக்கிறார். அவர் கூறியுள்ளதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் சகோதரர் லூர்து பிரான்ஸிஸ் அவர்கள், அவரது அலுவலகத்திலேயே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீரழிந்து இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
கடந்த 13 ஆம் தேதி, தூத்துக்குடி முறப்பநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றங்கரையில் மணல் கடத்தப்படுவதாக, ராமசுப்பிரமணியன் உள்ளிட்ட சில நபர்கள் மீது, முறப்பநாடு காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்திருக்கிறார். அந்த நபர் மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருந்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், தன் பணியைச் சரியாகச் செய்த அரசு அதிகாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் எந்தப் பாதுகாப்புமில்லாத சூழலே நிலவுகிறது. சமூக விரோதிகள் மேல் நடவடிக்கை எடுக்காமல், குற்றச் சம்பவங்களைப் பூசி மெழுகப் பார்க்கும் கையாலாகாத திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன். இன்னும் எத்தனை உயிர்ப் பலிகள் வேண்டும் இந்த திறனற்ற திமுக அரசு தூக்கத்திலிருந்து கண் விழிக்க?. இவ்வாறு அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.