அண்ணாமலை கண்முன்னே கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமதிப்பு!

கர்நாடகாவில் தமிழக அமைப்புகளை ஒருங்கிணைத்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது.

கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் தமிழ்நாடு மாநில பாஜக தலைவரான அண்ணாமலையை கர்நாடகாவில் தேர்தல் பணி மேற்கொள்ள அக்கட்சி மேலிடம் நியமித்தது. கர்நாடகா மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். கர்நாடகாவை பொறுத்தமட்டில் பெங்களூர், பெங்களூர் புறநகர், மைசூர், சாம்ராஜ்நகர், சிவமொக்கா உள்பட பல மாவட்டங்களில் தமிழர்கள் அதிகமாக உள்ளனர். குறிப்பாக பெங்களூரில் சிவாஜி நகர், சாம்ராஜ்பேட்டை, காந்தி நகர், சாந்தி நகர் உள்பட சில தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளாக தமிழர்கள் உள்ளனர்.

அதேபோல் பாஜகவின் முன்னாள் முதல்வரான எடியூரப்பாவின் சொந்த மாவட்டமான சிவமொக்காவிலும் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் சிவமொக்கா சட்டசபை தொகுதிகளில் தமிழர்களின் வாக்கு என்பது கணிசமாக உள்ளது. இந்த தொகுதி எம்எல்ஏவாக பாஜகவின் மூத்த தலைவர் கேஎஸ் ஈஸ்வரப்பா உள்ளார். கடந்த ஆண்டு அமைச்சராக இவர் இருந்தபோது ஒப்பந்ததாரர் கமிஷன் குற்றம்சாட்டி ஒருவர் தற்கொலை செய்த நிலையில் ஈஸ்வரப்பாவிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த தேர்தலில் அவருக்கு போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கவில்லை. மாறாக சிவமொக்கா சட்டசபை தொகுதியில் பாஜக வேட்பாளராக எஸ்என் சன்னபசப்பா போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தான் இன்று சிவமொக்கா என்இஎஸ் மைதானத்தில் தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தின் மூலம் தமிழர்களின் ஓட்டுக்களை பாஜக அறுவடை செய்ய திட்டமிட்டு இருந்தது. இந்த கூட்டத்தில் தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், பாஜகவின் சிட்டிங் எம்எல்ஏவான கேஎஸ் ஈஸ்வரப்பா மற்றும் பாஜக வேட்பாளர் சன்னபசப்பா உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் கூட்டம் என்பதால் தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் ஒலிபரப்பு செய்யப்பட்டது. ‛நீராருங்கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்” என தொடங்கி தமிழ்தாய் வாழ்த்து பாடிக்கொண்டிருந்தபோதே மேடையில் எழுந்த நின்ற ஈஸ்வரப்பா எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து பாதியில் தமிழ்தாய் வாழ்த்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழ்தாய் வாழ்த்தை கேசட்டில் ஒலிபரப்ப வேண்டாம். வேண்டுமானால் யாராவது படியுங்கள் என கூறினார். யாரும் முன்செல்லாத நிலையில் தமிழ்தாய் வாழ்த்துக்கு பதில் கன்னடதாய் வாழ்த்தை பாடும்படி கூறினார். இதையடுத்து மேடையில் கன்னடதாய் வாழ்த்து பாடப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி சர்ச்சையை உருவாக்கி உள்ளது.