டெல்லியில் முதல்வர் ஸ்டாலின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!

டெல்லி சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை திரும்புவதற்காக விமான நிலையத்தில் காத்திருந்த நிலையில் அங்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கிண்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தார்.

இன்று காலை 6 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி.க்கள் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, டெல்லியில் ஜனாதிபதியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கிண்டியில் அமையவுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை’ திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று ஜூன் 5ஆம் தேதி சென்னை வர ஜனாதிபதி திரௌபதி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத் தலைவரைச் சந்திக்கச் சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்ப டெல்லி இந்திராகாந்தி விமான நிலையம் வந்தார். அப்போது, மகாராஷ்டிரா செல்வதற்காக விமான நிலையம் வந்திருந்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். விமானத்திற்காக வி.ஐ.பி அறையில் காத்திருந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார் நிர்மலா சீதாராமன். கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கும் மேலாக இந்த சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது அரசியல் நிலவரம் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.