தூத்துக்குடி விஏஓ கொலை சம்பவத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி கிராம நிறைவாக அலுவலர் கொலை சம்பவத்துக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் உள்ள பல்வேறு கனிம வளங்களை பாதுகாக்கவும், பெருக்கவும், பயன்பாட்டை முறைப்படுத்தவும், முறைகேடுகளால் கொள்ளை போவதைத் தடுக்கவும், அரசுக்கு புதிய வருவாயை ஈட்டவும் தனியாக ஒரு புதிய வளங்கள் மற்றும் சுரங்கங்கள் அமைச்சகம் உருவாக்கப்படும் என்றும், இதன் வாயிலாக அரசுக்குக் கிடைத்திடும் வருவாய் பன்மடங்கு அதிகரிக்கத் தேவையான புதிய கொள்கையும், செயல்திட்டமும் வகுக்கப்பட்டு தேவையான செயல்பாடுகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எனவும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியே நிறைவேற்றப்படாத நிலையில், 85 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக தி.மு.க. தன்னைத் தானே பறைசாற்றிக் கொள்வது கேலிக்கூத்தாக உள்ளது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு புதிய அமைச்சகம் ஏதும் அமைக்கப்பட்டதாக தெரியவில்லை. இதேபோல அரசுக்கு போதிய வருவாய் ஈட்டப்பட்டதாகவும் தெரியவில்லை. 2019-2020 ஆம் ஆண்டில் 1,302 கோடி ரூபாயாக இருந்த வருவாய் 2021-2022 ஆம் ஆண்டில் சற்று குறைந்து 2022-2023 ஆம் ஆண்டில் சற்று உயர்ந்து இருக்கிறது. 2023-2024 ஆம் ஆண்டிற்கான சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் குறித்த கொள்கை விளக்கக் குறிப்பில் 2022-2023 ஆம் ஆண்டில் கனிம வளங்கள் மூலமாக 1,572 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசிற்கு கிடைத்து இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதாவது, இது ஒரு வழக்கமான உயர்வே தவிர, மிகப் பெரிய அளவில் தமிழ்நாடு அரசின் வருவாய் உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாறாக, சட்டவிரோதமாக தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் மணல் கொள்ளை நடைபெறுவதும், அந்த மணல் கேரள மாநிலத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதும் சமூக வலைதளங்களில் வந்து கொண்டேயிருக்கின்றன. அதைத் தடுக்க தி.மு.க. அரசு எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் கள யதார்த்தம். மாறாக, பெரும்பாலான இடங்களில் தி.மு.க.வினரின் ஆதரவுடன் மணல் கொள்ளை அமோகமாக நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் 15,000 கோடி ரூபாய் அளவிற்கு தமிழ்நாட்டில் மணல் கொள்ளை நடைபெறுவதாக செய்திகள் வருகின்றன.
சென்ற ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் சட்ட விரோதமான மணல் எடுக்கப்படுவதையும், அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்காததையும் சுட்டிக்காட்டி, எங்கெல்லாம் சட்ட விரோதமாக மணல் எடுக்கப்படுகிறது என்பதை பத்திரிகையாளர்களுக்கு காட்டிய ஒரு நபர் மணல் கொள்ளையர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். இப்படிப்பட்ட நிலையில், தாமிரபரணி ஆற்றில் நடக்கும் மணல் கடத்தலுக்கு எதிராக கிராம நிருவாக அதிகாரி திரு. லூர்து பிரான்சிஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் என்பதற்காக அவருடைய அலுவலகத்தில் புகுந்து மணல் கடத்தல் கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்திருக்கிறது. கொலையுண்ட அதிகாரி பணி மாறுதல் கோரியும் அது நிராகரிக்கப்பட்டது என்றும், பணி மாறுதல் அளித்திருந்தால் இந்தக் கொலை நடைபெற்றிருக்காது என்றும் கூறப்படுகிறது. நேர்மையாக செயல்பட்ட ஓர் அரசு அதிகாரி கொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கொலை செய்யப்பட்ட லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கொலைச் சம்பவத்தின் மூலம் தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கனிமக் கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும், சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதும் தெளிவாகிறது. லூர்து பிரான்சிஸ் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தாலும், குற்றவாளிகள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என்பதும், அரசு அதிகாரிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
மக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், கிராம நிர்வாக அதிகாரியை வெட்டிக் கொன்ற குற்றவாளிகளை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி விரைந்து தண்டனைப் பெற்றுத் தரவும், தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி அரசின் வருவாயைப் பெருக்கவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.