ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு தொடர்புடைய 50 க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்து உள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனம் ஜி ஸ்கொயர். இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்தது. ஜி ஸ்கொயர் நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை இழப்பில் இயங்கி வருவதாக கணக்கு காட்டப்பட்டு உள்ள நிலையில், புதிய முதலீடுகளுக்கு கடந்த 2 ஆண்டுகளில் பணம் கிடைத்தது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாக கூறப்பட்டது. அதிக அளவிலான நிலங்களை ஒரே நேரத்தில் கையகப்படுத்தியதாகவும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு உள்ளது.தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தினார். இதில் திமுக பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி சென்னை, திருச்சி, கோவை உட்பட தமிழ்நாட்டில் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு தொடர்புடைய 50 க்கும் அதிகமான இடங்களில் காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள தொடங்கினர். கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் வருமான வரிசோதனை நடைபெற்றது. சென்னையை பொறுத்தவரை நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, சேத்துப்பட்டு உள்ளிட்ட 30 க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர். அத்துடன் சென்னை நீலாங்கரையில் உள்ள ஜிஸ்கொயர் நிறுவன நிர்வாகி வீட்டிலும் கடந்த 4 நாட்களாக சோதனை நடைபெற்றது. அதேபோல் சென்னை அண்ணா நகர் தொகுதி எம்.எல்.ஏ. மோகனின் மகன் கார்த்திக் என்பவரின் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
குறிப்பாக ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி ஸ்கொயர் தலைமையகத்தில் கடந்த 4 நாட்களாக 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சல்லடைபோட்டு தேட தொடங்கினர். இந்த நிலையில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நேற்றுடன் நிறைவடைந்து இருக்கிறது. இதில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்று இருப்பதாகவும், விரைவில் இந்த சோதனை குறித்து விரிவாக அறிவிக்கை வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.