இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின் படி, அதிகம் கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது ஆண்டாக முதலிடம் வகிப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த நிதியாண்டில் முதல் 11 மாதத்தில் 68 ஆயிரம் ரூபாய் தமிழகம் கடன் வாங்கி முதலிடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2022-23 நிதி ஆண்டில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. கடந்த நிதியாண்டில் முதல் 11 மாதங்களில் தமிழகம் ரூ.68 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுது. தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக ஆந்திரப் பிரதேசம் ரூ.51,860 கோடி வாங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் மகாராஷ்டிரா ரூ.50 ஆயிரம் கோடியுடன் 3வது இடத்தில் இருக்கிறது. கடந்த 2020-21, 2021-22 ஆகிய முந்தைய 2 நிதி ஆண்டுகளிலும் அதிக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு கடந்த 2020-21 நிதி ஆண்டில் ரூ.87,977 கோடி கடன் வாங்கிய இருந்ததாகவும், 2021-22-ல் ரூ.87 ஆயிரம் கோடி கடன் வாங்கியதாகவும் ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் கடந்த 2020-21, 2021-22 நிதியாண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2022-23 நிதி ஆண்டில் தமிழகம் வாங்கிய கடன் சற்றே குறைந்துள்ளதாகவும், அதேநேரத்தில், நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ள கடன் அளவுக்குக் கீழ்தான் தமிழ்நாடு கடன் பெற்றுள்ளதாகவும் ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக கடன் வாங்கும் 10 மாநிலங்களை ஆய்வு செய்த போது, கடந்த நிதி ஆண்டில் உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா ஆகியவை கடன் வாங்குவதை அதிக அளவில் குறைத்துள்ளதாக கூறப்படுகிறது. 2022-23 நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் உத்தரப் பிரதேசம் ரூ.33,500 கோடி கடன் வாங்கி உள்ளதாகவும், ஆனால் அதற்கு முந்தைய நிதியாண்டான 2021-22 நிதி ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலம் ரூ.62,500 கோடி கடன் வாங்கி இருந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு கடந்த நிதியாண்டில் சொந்த வரி மற்றும் வரியற்ற வருவாய் ஆகியவற்றின் அதிகரித்ததால் கடன் வாங்குதை குறைத்துள்ளதாகவும் கூறப்பபடுகிறது. அதேநேரம், ஹரியாணா, குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்கள் 2021-22 நிதி ஆண்டில் வாங்கிய கடனைவிட 2022-23 நிதி ஆண்டின் முதல் 11 மாதங்களில் அதிக கடன் வாங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 3 மாதங்களில் (ஏப்ரல்-ஜூன்) மகாராஷ்டிரா ரூ.25 ஆயிரம் கோடியும், தமிழகம் ரூ.24 ஆயிரம் கோடியும், ஆந்திரப் பிரதேசம் ரூ.20 ஆயிரம் கோடியும் கடன் வாங்கும் என ரிசர்வ் வங்கி கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.