எப்போதும் மக்களுக்காக போராடுவது, தமிழர் நலன் காப்பது தி.மு.க. தான்: உதயநிதி ஸ்டாலின்

தேர்தலுக்கு மட்டுமே மக்களை சந்திக்கும் இயக்கமல்ல என்றும், எப்போதும் மக்களுக்காக போராடுவது, தமிழர் நலன் காப்பது தி.மு.க. தான் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பகுதி வாரியாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வந்தனர். இந்தநிலையில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதற்காக நேற்று இரவு 7 மணி அளவில் அவர் ஈரோடு பி.பி.அக்ரகாரம் பகுதிக்கு வந்தார். அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. எப்போதும் மக்களுக்கான கட்சி. நான் அமைச்சராக பொறுப்பு ஏற்றதும், பிரதமரை புதுடெல்லியில் சென்று பார்த்தேன். அப்போது 30 நிமிடங்கள் அவரிடம் பேசியபோது, அவரிடம் நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தேன். ஆனால், இன்னொரு கட்சியை சேர்ந்த கோஷ்டி, அதாவது எடப்பாடி பழனிசாமி கோஷ்டி பஞ்சாயத்தை சரிசெய்ய பிரதமரை சென்று சந்தித்து பேசியுள்ளார். அ.தி.மு.க. கடந்த தேர்தலுக்கு வந்தார்கள். இனி அடுத்த தேர்தலுக்கு வருவார்கள். ஆனால் தி.மு.க. தேர்தலுக்கு தேர்தல் வரும் இயக்கம் அல்ல. எப்போதும் மக்களுக்காக களத்தில் போராடும் இயக்கம். தமிழர்களின் நலன் காக்கும் இயக்கம்.

கிரிக்கெட்டில் ஐ.பி.எல். நடத்துவதுபோல அ.தி.மு.க.வில் ஐ.பி.எல். நடத்தும் அளவுக்கு ஈ.பி.எஸ்.அணி, ஓ.பி.எஸ்.அணி, சசிகலா அணி, டி.டி.வி. தினகரன் அணி, தீபா அணி, அதில் டிரைவர் அணி, கணவர் அணி என்று பல அணிகள் உள்ளன. வாக்குறுதிகள் தி.மு.க. மக்களுக்கு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனமாக உள்ளது. 80 சதவீதம் நிறைவேற்றி இருக்கிறோம். விரைவில் 100 சதவீதம் நிறைவேற்றி விடுவோம். இன்று இந்திய நாடே தமிழக முதல்-அமைச்சர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை கவனித்துக் கொண்டு இருக்கிறது. அவர் சுட்டிக்காட்டுபவர்தான் பிரதமர் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து அ.தி.மு.க.வை அப்புறப்படுத்தியதுபோன்று, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.