தமிழ்நாட்டில் முதல்முறையாக மருத்துவ சுற்றுலா மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
தமிழ்நாட்டின் முதல் சர்வதேச மருத்துவ சுற்றுலா மாநாட்டை சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திறமையான சுகாதார நிபுணர்கள், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நியாயமான விலையில் மருத்துவச் சேவைகளை அளிப்பதன் மூலம், சுகாதார தேவைகளுக்கான நம்பகமான இடமாக தமிழ்நாடு திகழ்கிறது. தமிழ்நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு உட்கட்டமைப்பு, சிறந்த மருத்துவ நடைமுறைகளை கையாளுவதற்கு உதவிகரமாக விளங்குவதால் மருத்துவ சுற்றுலாவிற்கு சிறந்த இடமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் 2023-24-ம் ஆண்டிற்கான சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கையில் மருத்துவ சுற்றுலா குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாட்டில் வேகமாக வளர்ந்துவரும் சுற்றுலாப் பிரிவில் மருத்துவ சுற்றுலாவும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் அமைந்துள்ள பல்நோக்கு மற்றும் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகள், மருத்துவ சுற்றுலாவிற்கான தலமாக வளர்வதற்கு மிகப்பெரிய ஆற்றலைக் கொண்டுள்ளன.
மருத்துவச் சுற்றுலாவிற்கான சிறந்த தலமாக தமிழ்நாட்டை அடையாளப்படுத்தும் வகையில், மருத்துவத்துறையில் தொழில் முனைவோர்களுடன் இணைந்து சர்வதேச மருத்துவச் சுற்றுலா மாநாடு சென்னையில் நடத்தப்படும். இம்மாநாடு உடல்நலம் பேணும் வல்லுனர்களை ஒருங்கிணைக்கும் வகையில் கண்காட்சி அரங்கங்கள், கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் நடத்தவும் ஒரு சிறந்த தளமாக அமையும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் விளைவாக, சென்னை கிண்டியில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று தமிழக சுற்றுலாத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகளின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தமிழ்நாட்டில் முதல் முறையாக நடத்தப்படும் மாநாடு இதுவாகும்.
தேசிய மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவைகள் அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகள் குறித்த ‘தமிழ்நாடு – குணமடைய உலகம் தேடி வரும் இடம்’ என்ற மருத்துவ சுற்றுலா கையேட்டை இந்த மாநாட்டு தொடக்க நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் வெளியிட்டார். மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இம்மாநாட்டில் அப்பல்லோ, ரேலா, மியாட், எம்.ஜி.எம். ஹெல்த்கேர் உள்ளிட்ட பல்வேறு ஆஸ்பத்திரிகளின் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார்.
சுற்றுலாத்துறையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் இணைந்து தமிழ்நாட்டில் மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்தவும், தமிழ்நாட்டை முன்னணி மருத்துவ சுற்றுலாத் தலமாக மாற்றவும் இம்மாநாடு முக்கிய பங்காற்றும் என்று இந்த மாநாட்டு தொடக்க விழாவில் வரவேற்புரை ஆற்றிய சுற்றுலா, தமிழக பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் குறிப்பிட்டார். மாநாட்டில் வங்காளதேசம், நேபாளம், சவுதி அரேபியா, ஓமன், மியான்மர், இலங்கை, மொரிசியஸ், மாலத்தீவுகள், வியட்நாம் மற்றும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் என 21 வெளிநாடுகளைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மேலும் தமிழ்நாட்டின் 120 தனியார் ஆஸ்பத்திரிகளில் இருந்து பல்வேறு பிரிவுகளில் பிரபலமான டாக்டர்கள், அயல்நாட்டு தூதரக அதிகாரிகள், பயண ஏற்பாட்டாளர்கள், ஓட்டல் நிர்வாகத்தினர், காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், சித்தா, யோகா, ஆயுஷ் துறைகளின் டாக்டர்கள், ஆரோக்கிய சுற்றுலா ஆஸ்பத்திரிகளில் உள்ள டாக்டர்கள் என 350 பேர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் நடத்தப்பட்ட பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் அவர்கள் தங்கள் கருத்துகளை வெளியிட்டனர். இம்மாநாடு தொடக்க நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், சுற்றுலாத்துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் உமா, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநர் கணேஷ், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தலைவர் நிர்வாகிகள், பல்வேறு உயர் சிறப்பு மருத்துவமனைகளின் நிர்வாகிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:-
மருத்துவ சுற்றுலா மாநாட்டில் 21 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். 300-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் வந்துள்ளனர். இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்தில் மருத்துவத்துறை வளர்ச்சி பெறும். வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். ஆண்டுதோறும் 28 கோடி பேர் தமிழகத்திற்கு சுற்றுலாவிற்காக வருகின்றனர். அதில் 15 லட்சம் பேர் மருத்துவ சுற்றுலாவிற்கு மட்டும் வந்துள்ளனர். தமிழகத்தில் சிறந்த மருத்துவம் குறைந்த விலையில் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசின் மருத்துவ சுற்றுலா மாநாட்டு கையேடு வெளியிடப்பட்டு உள்ளது. அந்த கையேட்டில், பதிவு செய்யப்பட்ட ஆஸ்பத்திரிகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் இடைத்தரகர்களின் தயவு இல்லாமல் பிற நாட்டை சேர்ந்த மருத்துவ சுற்றுலா பயணிகள், தமிழகத்தில் எந்த ஆஸ்பத்திரியில், எவ்வளவு கட்டணத்தில் சிகிச்சை பெறலாம் என்ற தகவலை பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.