புல்வாமா தாக்குதலும், 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்ததும் பிரதமர் மோடி அரசின் அலட்சியம், அக்கறையின்மையால் நிகழ்ந்தது என்று காங்கிரஸ் சமூக ஊடகத்துறை தலைவர் சுப்ரியா ஸ்ரீனேட் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் சுப்ரியா ஸ்ரீனேட் நேற்று கூறியதாவது:-
புல்வாமா பயங்கரவாத தாக்குதல் குறித்து ஜம்மு- காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ள உண்மை அதிர்ச்சி அளிக்கிறது. இந்த திடுக்கிடும் தகவலை கேட்டு நாடு முழுவதும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தகவல்கள் வெளியாகி 2 வாரங்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், இதுவரை மோடி அரசிடமிருந்து எந்த பதிலும் இல்லை. சத்யபால் மாலிக் கருத்துப்படி, புல்வாமா தாக்குதல் மற்றும் 40 வீரர்களின் உயிர்த் தியாகம், மோடி அரசின் அலட்சியம், அக்கறையின்மையின் விளைவால் நிகழ்ந்துள்ளது. நமது ராணுவ வீரர்கள் கேட்ட விமானம் கிடைத்திருந்தால் புல்வாமா பயங்கரவாத தாக்குதல் தோல்வி அடைந்திருக்கும்.
புல்வாமா தாக்குதல் பற்றிய செய்தி மாலை 3.15 மணி அளவில் வெளியானது. ஆனால், கார்பெட் தேசிய பூங்காவில் பியர்கிரில்ஸுடன் டிஸ்கவரி தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக இரவு 7 மணி வரை தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்தார் மோடி. அப்போதைய பாஜக தலைவராக இருந்த அமித் ஷா, இந்த தாக்குதல் நடந்த 2 மணி நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றினார். தாக்குதல் குறித்து கேள்விப்பட்ட பிரியங்கா காந்தி, லக்னோவில் தனது முதல் செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்துவிட்டு, வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி, ஜி-20 தூதுவர்களுடன் நடத்தவிருந்த மதிய உணவு நிகழ்ச்சியை ரத்து செய்தார்.
சத்யபால் மாலிக் பொய் சொல்கிறார் என்றால், அவர் மீது பிரதமர் அவதூறு வழக்கு தொடர வேண்டும். அவர் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டு தீவிரமானது. ஆனால், அதற்கு பதிலாக சிபிஐ மூலம் சம்மன் அனுப்பி மாலிக்கை மிரட்ட மோடி அரசு முயற்சிக்கிறது. மாலிக்கின் குற்றச்சாட்டு உண்மை என்றால், இதற்காக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடிமன்னிப்பு கேட்க வேண்டும். அடிக்கடி எல்லோர் மீதும் தேசத்துரோக குற்றம் சாட்டுபவர்கள், இதற்கு பதில் சொல்ல வேண்டும். இவ்வாறு சுப்ரியா ஸ்ரீனேட் கூறினார்.