பிரதமர் மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் அடையாளம் காட்டிய தமிழ்நாட்டு ஆளுமைகளை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சிறப்பித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களோடு உரையாடும் மனதின் குரல் வானொலி உரையாடல் நிகழ்ச்சியின் நூறாவது அத்தியாயம் இன்று ஒலிபரப்பானது. நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த நிகழ்ச்சிக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று சிறப்புத் திரையிடலுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் இதுவரை ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமரால் அடையாளம் காணப்பட்டு சிறப்பிக்கப்பட்ட தமிழ்நாட்டின் ஆளுமைகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதோடு பல்துறைகளைச் சேர்ந்த பிரமுகர்களும், வேளாண் சமுதாயத்தைச் சார்ந்த விவசாயப் பெருமக்களும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.
பிரதமரால் பாராட்டப்பட்ட ஆளுமைகள் பேசும்பொழுது, இது எங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் என்றும், மிகச் சாதாரண மனிதர்களான எங்களை பிரதமர் அடையாளம் கண்டு எங்கள் பணியினை பாராட்டியது எங்களுக்கு, மேலும் ஊக்கமளிப்பதாக இருந்தது என்றும், இது எங்களை இன்னும் நம் சமுதாயத்திற்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பங்காற்ற தூண்டியது என்றும் தெரிவித்தனர்.
அதன் பின் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை புரிந்திருந்த விருந்தினர்களிடையே உரையாற்றினார். மிக எளிய மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களின் வெற்றிக்கதைகளை நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை இந்த மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் சிறப்பித்தது இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் என்று கூறினார். நாட்டின் பாரம்பரியம் குறித்த கருத்துக்களையும் தனது அனுபவங்களையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். மனதின் குரல் நிகழ்ச்சி ஏற்படுத்தியுள்ள நேர்மறையான மாற்றங்கள் பற்றியும் ஆளுநர் பேசினார். ஆளுநர் அனைத்துத் துறைகளிலும் நாட்டின் தற்போதைய வளர்ச்சி குறித்துப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். வேளாண் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை ஆளுநர் பட்டியலிட்டார். பாரம்பரிய நெல் சாகுபடியில் இந்தியாயின் வரலாறு, எதிர்கால இலக்கு மற்றும் முன்னேற்றம் பற்றி தரவுகளுடன் எடுத்துக் கூறினார்.
முன்னதாக, ஆளுநர் அவர்கள் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் தொகுத்திருந்த ‘மனதின் குரலில் தமிழ்நாட்டு ஆளுமைகள்’ எனும் டிஜிட்டல் புத்தகத்தை வெளியிட்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனதின் குரல் ஆளுமைகளை வாழ்த்தி நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.