இங்கே ஆட்சி நடக்கவில்லை.. சர்க்கஸ் தான் நடக்கிறது: எடப்பாடி பழனிசாமி

கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிக்கும் தமிழக அரசு ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மேலும் இங்கே ஆட்சி நடக்கவில்லை.. சர்க்கஸ் தான் நடக்கிறது என்றும் கூறியுள்ளார் .

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கடற்கரையோர மீனவ கிராமமான எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு 50-க்கும் மேற்பட்டோர் விஷசாராயம் வாங்கி குடித்துள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் சிலருக்கு வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் மற்றும் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் விஷசாராயம் குடித்ததில் எக்கியார் குப்பத்தில் 14 பேரும் சித்தமூரில் 8 பேரும் என 22 பேர் உயிரிழந்துள்ளனர். விஷசாராயம் அருந்தியதில் 22 பேர் பலியாகி இருப்பது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதனிடையே, விஷ சாராயம் குடித்து பலியானவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் உதவி தொகையை தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், கள்ளச்சாராயம் விற்ற குற்றவாளிக்கும் தமிழக அரசு ரூபாய் 50 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ளதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: –

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கு காரணமானவர் என்று இந்த அரசு வழக்கு பதிவு செய்துள்ள அம்மாவாசை என்பவர் திமுக ஒன்றிய கவுன்சிலர் நாகப்பன் என்கிறவருடைய தம்பி ஆவார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்மாவாசை தானும் அந்த மதுபானத்தை அருந்தியதாக அவரும் மருத்துவமனையில் தன்னை அனுமதித்துக் கொண்டார். இந்த நிலையில் போலி மதுபான வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அம்மாவாசைக்கு இந்த அரசு அதை போலி மதுபானத்தால் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் ரூபாய் 50 ஆயிரம் நிவாரணம் வழங்கி இருக்கிறது. இதுதான் நவீன திராவிட மாடல் ஆட்சி போலும்.

சில நாட்களுக்கு முன்னால் ஒருவர் தன்னை மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் கேப்டன் என்று பொய் சொல்லி முதல்வரை சந்தித்து பரிசு பெற்று செல்கிறார். தற்போது என்னவென்றால் கள்ளச்சாராயம் காய்ச்சி உயிரைப் பறித்தவர்க்கு அவரின் செயலை பாராட்டி பரிசு கொடுப்பது போல் நிவாரணம் கொடுக்கப்படுகிறது. இந்தியாவிலேயே, ஏன் இந்த உலகத்துலேயே குற்றவாளிக்கு நிவாரணம் வழங்குகின்ற கோமாளித்தனமான ஒரே அரசு தற்போது ஆட்சியில் உள்ள திமுகவின் விடியா அரசு தான்! நிர்வாக திறன் அற்ற முதல்வரின் தலைமையில் ஆட்சி நடக்கவில்லை.. இங்கே சர்க்கஸ் தான் நடக்கிறது. இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். “திமுக ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடுவதாக கூறினார். ஆனால் தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் தான் ஓடுகிறது. இப்போதுதான் காவல்துறை நடவடிக்கை எடுத்து மாநிலம் முழுவதும் பலரை கைது செய்து வருகிறது. இதை முன்கூட்டியே செய்திருந்தால் இத்தனை பேரின் உயிர் போயிருக்காது. கள்ளச்சாராயத்தை பற்றி பாடிய சமூக ஆர்வலர்கள் எல்லாம்ல இப்போது எங்கு போனார்கள்? நடிகர்கள் யாரும் இப்போது வாய் திறக்கவில்லையே.. 10 ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் கள்ளச்சாராய மரணம் என்பதே தமிழ்நாட்டில் இல்லாமல் இருந்தது. இத்தனை பேர் மரணத்துக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என அவர் கூறினார்.