முழு மதுவிலக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி!

தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் பலியாகியுள்ள நிலையில் அவர்கள் குடித்தது கள்ளச்சாராயம் இல்லை; தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் என்று டிஜிபி சைலேந்திரபாபு நேற்று மாலை அறிவிப்பு வெளியிட்டார். அந்த அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருக்கரணை கிராமம் மற்றும் பேரம்பாக்கம் கிராமங்களில் கைப்பற்றப்பட்ட சாராயம் தடய ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வறிக்கையில் இது மனிதர்கள் அருந்தும் சாராயம் அல்ல என்பதும், ஆலைகளில் பயன்படுத்தப்படும், மெத்தனால் என்ற விஷச்சாராயம் என்பதும் தெரிய வந்ததாக அவர் கூறியிருந்தார். டிஜிபியின் இந்த விளக்கம் விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் புனிதம் கிடையாது எல்லா சாராயமும் கெடுதல்தான் என்று அன்புமணி ராமதாஸ் குட்டு வைத்துள்ளார். இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் எட்டியார்குப்பம், சித்தாமூர் பேருக்கரணை ஆகிய இடங்களில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் உயிரிழப்புகளுக்கு காரணமானது கள்ளச்சாராயம் இல்லை என்றும், விஷச் சாராயம் தான் என்றும் காவல்துறை தலைமை இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கம் வியப்பாகவும், நகைப்பாகவும் உள்ளது.

கள்ளச்சாராயம் என்பதற்கு வரையறைகள் எதுவும் இல்லை. கள்ளச்சாராயம், காவல்துறை குறிப்பிடும் விஷச்சாராயம், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது வகைகள் அனைத்துமே உயிரிழப்பை ஏற்படுத்துபவை தான். அதற்கான கால அளவு மட்டும் தான் மாறுபடும். சட்டவிரோதமாக விற்கப்படும் சாராயம் தான் கள்ளச்சாராயம் என்றழைக்கப்படுகிறது. விஷச்சாராயம் குடித்ததால் தான் 21 உயிரிழந்தனர் என்பது கள்ளச்சாராயத்தை புனிதப்படுத்துவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும். கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்தது காவல்துறையின் தோல்வி தான். அதற்கு பொறுப்பேற்பதை விடுத்து வினோதமான விளக்கங்களை காவல்துறை அளிக்கக் கூடாது.

தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டு விட்டதால் தான் சிலர் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனாலை திருடி விற்பனை செய்ததாக காவல்துறை கூறுவதும் உண்மைக்கு புறம்பானது. தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராம், மெத்தனால் கலவை சாராயம் என அனைத்து வகை சாராயங்களும் தடையின்றி கிடைக்கின்றன. அவற்றை ஒழிக்க தமிழக அரசும், காவல்துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். டாஸ்மாக் மதுவும் ஆண்டுக்கு பல லட்சம் உயிர்களைப் பறிப்பதால் அதுவும் தடை செய்யப்பட வேண்டியது தான். அதனால் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடி முழு மதுவிலக்கை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.