காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா செல்கிறார்!

ஒருவார கால பயணமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜூன் முதல் வாரத்தில் அமெரிக்கா செல்கிறார். இந்த பயணத்தின்போது இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்ற இருக்கிறார்.

ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணம் சமீபத்தில்தான் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பிரிட்டன் பயணத்தின்போது ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் மற்றும் பிரிட்டிஷ் பார்லிமென்ட் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசியிருந்தார். அப்போது இந்தியாவின் ஜனநாயகம் குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார். இதனை பாஜக பெரும் பிரச்னையாக மாற்றியது. ராகுல் காந்தி வெளிநாட்டில் நமது நாட்டின் ஜனநாயகத்தை விமர்சித்துவிட்டார் என்று பாஜக கடுமையாக குற்றம்சாட்டியது. மட்டுமல்லாது அந்த நேரத்தில் அதானி விவகாரம் பெரியதாக வெடித்திருந்ததால் அதன் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருந்தது. ஆனால் பாஜக இது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்காமல், ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தியது. அதேபோல இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்க முயன்றபோது நாடாளுமன்றத்தில் தனக்கு பேச வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும், தன்னுடைய மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டது எனவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். அப்போதிலிருந்து ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணங்கள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அடுத்து வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் அமெரிக்காவுக்கு செல்கிறார். அங்கு நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் ராகுல் காந்தி அங்குள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடுகிறார். அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களுடனும் உரையாடுகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.