ராணுவ ஆட்சி மற்றும் மன்னர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். தாய்லாந்தில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 14-ந் தேதி தேர்தல் நடந்து முடிந்தது.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ராணுவம் கலைத்தது. அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி பிரயுத்சான் ஈசா பிரதமராக இருந்து வந்தார். இதற்கிடையே ராணுவ ஆட்சி மற்றும் மன்னர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து தாய்லாந்தில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 14-ந் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ராணுவ ஆதரவு பெற்ற கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பார்வர்டு கட்சி, பியூ தாய் கட்சி உள்ளிட்ட கட்சிகள் பலப்பரீட்சை நடந்தன. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் எதிர்க்கட்சிகள் அபார வெற்றி பெற்றன. ராணுவ ஆதரவு பெற்ற கட்சிகள் படுதோல்வியை சந்தித்தன. அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் 500 இடங்களை கொண்ட பிரதிநிதி சபையில் மூவ் பார்வர்ட் கட்சி 151 இடங்களை கைப்பற்றியது. பியூ தாய் கட்சி 141 இடங்களை தன் வசப்படுத்தியது. ராணுவத்தின் ஆதரவு பெற்ற ஆளும் கூட்டணியில் உள்ள இரண்டு கட்சிகள் வெறும் 15 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றன. பிரதமர் பிரயுத் சான் ஒக்சாவின் கட்சி 36 இடங்களை கைப்பற்றியது.
தேர்தல் முடிவுகளை அடுத்து தாய்லாந்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு ராணுவம் ஆட்சி முடிவுக்கு வரப்பட்டு ஜனநாயக முறையிலான ஆட்சி அமையவுள்ளது. பார்வர்டு கட்சி மேலும் சில கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் என்றும் பிடா லிம்ஜாரோ என்ரட்டா பிரதமராக பதவி ஏற்பார் என்றும் கூறப்படுகிறது. அடுத்த பிரதமர் யார் என்பதற்காக வாக்கெடுப்பு வருகிற ஜூலை மாதம் நடக்கிறது. இதில் செனட் சபையில் உள்ள 750 இடங்களில் 376 இடங்களை கைப்பற்ற வேண்டும். சென்ட் சபையில் ராணுவத்தால் நியமிக்கப்பட்ட 250 உறுப்பினர்களும் அடங்குவர். இது தொடர்பாக பார்வர்ட் கட்சி தலைவர் பீடா லிம்ஜாரோ என்ரட்டா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘நாட்டின் 30-வது பிரதமராக மாற்றத்தை கொண்டுவர தயாராக இருக்கிறேன். நீங்கள் என்னுடன் உடன்பட்டாலும் உடன்படாவிட்டாலும் நான் உங்கள் பிரதமராக இருப்பேன். நீங்கள் எனக்கு வாக்களித்தாலும் இல்லாவிட்டாலும் உங்களுக்கு சேவை செய்வேன்’ என்றார்.