2025-ம் ஆண்டுக்குள் ‘காசநோய் இல்லா தமிழ்நாடு’ என்ற நிலையை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், காசநோய் ஒழிப்பு உச்சி மாநாட்டை சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். இதேபோல, 3 எச்.பி. புதிய காசநோய் மருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தி, காணொலி காட்சி மூலம் கோவை மற்றும் திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள ‘சி மற்றும் டி.எஸ்.டி.’ ஆய்வகங்களையும் அவர் திறந்து வைத்தார். மேலும், 2.0 மாநில காசநோய் ஒழிப்பு விரிவான திட்ட ஆவணத்தை வெளியிட்டு, மக்களிடயே காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அதற்கான காணொலியை வெளியிட்டார். நிகழ்ச்சியில் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
இலக்கு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டால் காசநோய் வருவதை முழுமையாக தடுக்கலாம். 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து காசநோயை முழுமையாக அகற்றி “காசநோய் இல்லா இந்தியா” என்ற நிலையை எட்டிட, நிலையான வளர்ச்சிக்கொள்கையின் கீழ் இந்தியா பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலும் “காசநோய் இல்லா தமிழ்நாடு” என்ற நிலையை வரும் 2025-ம் ஆண்டுக்குள் அடைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 2019-ம் ஆண்டு காசநோய் பாதிப்புடையவர்களாக கண்டறியப்பட்டவர்கள் 1 லட்சத்து 8 ஆயிரத்து 344 பேர். குணம் அடைந்தவர்கள் 91 ஆயிரத்து 405 பேர். 2020-ம் ஆண்டு புதியதாக கண்டறியப்பட்டவர்கள் 68 ஆயிரத்து 922 பேர். குணம் அடைந்தவர்கள் 57 ஆயிரத்து 391 பேர். 2021-ம் ஆண்டு புதியதாக கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை 82 ஆயிரத்து 680 பேர். குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 68 ஆயிரத்து 810 பேர் ஆகும். 2022-ம் ஆண்டு புதியதாக கண்டறியப்பட்டவர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்து 592 பேர். குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்து 592 பேர் ஆகும்.
காசநோயாளிகளுடன் தொடர்பில் உள்ள குழந்தைகளுக்கு காசநோய் தாக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக “காசநோய் தடுப்பு சிகிச்சை” எனும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் காசநோயாளிகளுடன் தொடர்பில் உள்ள 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து 6 மாதம் தினமும் ஐ.என்.எச். தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. காசநோயாளிகளுக்கான ஊட்டச்சத்து உதவித்தொகை திட்டத்தின்கீழ் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் காசநோயாளிகளுக்கு ரூ.500 வழங்கப்படுவதைப்போல, தனியார் துறையில் சிகிச்சை எடுக்கும் காசநோயாளிகளுக்கும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காசநோயால் பாதிக்கப்பட்டவர்களில் மிகவும் வறுமை நிலையில் உள்ளவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உதவியினை தன்னார்வலர்கள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காசநோயை கிராம அளவில் கண்டறிந்து உடனடியாக சிகிச்சை வழங்க ஏதுவாக பெண் தன்னார்வலர்கள், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் போன்றோருக்கு காசநோய் குறித்து போதுமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. “காசநோய் இல்லாத” நிலையை அடையும் மாவட்டம், மாநிலம் அங்கீகரிக்கப்படும். அந்தவகையில், காசநோய் இல்லா தமிழ்நாடு அமைந்து, அனைத்து மாவட்டங்களும் தங்கப்பதக்கங்கள் வெல்ல அனைவரும் இணைந்து உழைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.