கரூரில் வருமான வரி துறை அதிகாரிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதை ஓ. பன்னீர்செல்வம் கண்டித்துள்ளார்.
கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் இன்று வருமான வரி துறையினர் சோதனையிட்டனர். அப்போது திமுகவினர் ஒன்றுதிரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டதோடு அவர்கள் மீது தாக்குதல் நடத்தி கார் கண்ணாடியை உடைத்தனர். இது காவல்துறையின் மீதான நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது. மேலும், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆளுங்கட்சியினரின் அத்துமீறல் தனத்தை காட்டியுள்ளது என்று கண்டனங்கள் வலுத்து வருகின்றன. இதற்கிடையே வருமான வரி அதிகாரிகள் கரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததோடு, திமுகவினர் தாக்கியதாக அதிகாரி காயத்ரி உள்ளிட்டோர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், வருமான வரி துறை அதிகாரிகள் வீட்டு சுவர் ஏறி குதிக்க வேண்டிய அவசியம் இல்லை. முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். எனது இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை; இது போன்ற சோதனைகளை நாங்கள் எதிர்கொள்வது புதிதல்ல என்றார்.
இந்த நிலையில் திமுகவினரின் செயலை கண்டித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
டாஸ்மாக் கடைகளில் ஒரு மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 10 வசூலிக்கப்படுகிறது என்ற புகார் பரவியதையடுத்து, இன்று அமைச்சருக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரிச்சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது வாகனங்கள் தாக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
திரையில் நடப்பதெல்லாம் நிஜத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது. அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் பணியை தொடர்ந்து மேற்கொள்ள ஏதுவாக அவர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டுமென்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.