டாஸ்மாக் மதுக்கடையில் திருட முயற்சி: போலீசார் துப்பாக்கி சூடு!

நீலகிரி பந்தலூர் டாஸ்மாக் மதுக்கடையில் திருட முயன்ற கொள்ளையர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மதுபாட்டில்களை வீசி, கொள்ளையர்கள் தாக்கியதில் 2 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குந்தலாடியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில், கூடலூர் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இப்ராகிம் தலைமையில் போலீசார் குந்தலாடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை திறந்து இருந்தது. அதிகாலை நேரத்தில் மதுக்கடை திறந்து இருந்ததால் போலீசார் சந்தேகம் அடைந்தனர். உடனே அவர்கள் அந்த மதுக்கடை அருகே சென்று பார்த்தனர். அப்போது கடைக்குள் 2 மர்மநபர்கள் நின்று கொண்டு இருந்தனர். மேலும் அவர்கள் அங்கிருந்த மதுபாட்டில்களை எடுத்து சாக்குப்பையில் வைத்து கொண்டு இருந்தனர். அதோடு டாஸ்மாக் கடையில் இருந்த பணப்பெட்டியை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்து இருப்பதும் தெரிய வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். போலீசாரை கண்டதும் மர்மநபர்கள் 2 பேரும் திகைத்து நின்றனர். உடனடியாக சுதாரித்த அவர்கள் இருவரும், போலீசாரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக கத்தியை காட்டி மிரட்டல் விடுத்தனர். ஆனால் அதற்கு அஞ்சாமல் போலீசார் தைரியமாக முன்னேறிச் சென்று, கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் 2 பேரும் திடீரென்று அங்கிருந்த மதுபாட்டில்களை உடைத்து போலீசாரை நோக்கி வீசி தாக்கத் தொடங்கினார்கள். இதில் மதுபாட்டில்கள் உடைந்து பட்டதில் போலீஸ்காரர்கள் அன்பழகன், ஷியாபுதீன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். நிலைமை மோசம் ஆவதை உணர்ந்த போலீசார், சுதாரித்து கொண்டு தற்காப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனாலும் மர்ம நபர்கள் 2 பேரும் தொடர்ந்து தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் தற்காப்பு முயற்சியாக போலீசார் கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் கொள்ளையர் ஒருவரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. காயம் அடைந்த அந்த நபர், தப்பி ஓட முடியாமல் அங்கேயே விழுந்தார். அதை பார்த்து அவருடைய கூட்டாளி அதிர்ச்சி அடைந்தார். போலீசார் அதிரடி நடவடிக் கையில் இறங்கியதால் அவர், மதுபாட்டில்கள் மற்றும் கொள்ளையடித்த பணத்தை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து படுகாயம் அடைந்த போலீஸ்காரர்கள் 2 பேர் மற்றும் கொள்ளையனை போலீசார் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக கொள்ளையனை ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிடிபட்ட கொள்ளையனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், டாஸ்மாக் கடையில் கொள்ளையடிக்க முயன்று பிடிபட்டது நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா பாட்டவயல் அருகே கொட்டாடு பகுதியை சேர்ந்த மணி என்ற சாம்பார்மணி என்பதும், அவருடைய கூட்டாளி ஜிம்மி என்பதும், அவர்கள் மீது கேரளாவில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. கொள்ளையனிடம் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் ரூ.35 ஆயிரம் மீட்கப்பட்டது. தப்பி ஓடிய ஜிம்மியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இது குறித்த தகவலின் பேரில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், கூடலூர் ஆர்.டி.ஓ. குதரத்துல்லா, தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு செந்தில்குமார், பந்தலூர் தாசில்தார் நடேசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை முயற்சி நடந்த டாஸ்மாக் கடையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். டாஸ்மாக் கடையில் திருட முயன்ற கொள்ளையனை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம், நீலகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.