குடியாட்சியில் முடியாட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்: சீமான்

சோழர் காலத்தில் முடியாட்சியில் குடியாட்சி நடத்தினார்கள். இப்போது குடியாட்சியில் முடியாட்சியை நடத்தி கொண்டு இருக்கிறார்கள் அவர்களுக்கு எதற்கு செங்கோல் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாட்டன் காலத்து செங்கோல் இது கிடையாது. உம்மிடி பங்காருவில் தயாரித்த செங்கோல் இது. சோழ செங்கோல் என்று சொல்லாமல் உம்மிடி செங்கோல் என்று வேண்டுமானால் சொல்லலாம். நேரு கையில் ஒரு செங்கோலை ஆதீனங்கள் கொடுத்தாங்க.. விடுதலை செய்த போது கொடுத்தீர்கள்.. அப்போதும் இதையேதான்சொல்லி கொடுத்தீர்கள். நமது பாட்டன் இதை வைத்தா ஆட்சி செய்தார். இந்த செங்கோலை கொடுத்து தமிழருக்கு தமிழ் மொழிக்கு என்ன பெருமையை சேர்த்து விட்டீர்கள். இப்போது இந்த செங்கோலை கொண்டு போய் வைப்பதனால் என்ன வந்து விட போகிறது. சோழர் காலத்தில் முடியாட்சியில் குடியாட்சி நடத்தினார்கள். இப்போது குடியாட்சியில் முடியாட்சியை நடத்தி கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எதற்கு செங்கோல்.

உங்களுக்கு கவனம் தமிழகத்தில் எப்படியாவது அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான். அதற்கு தமிழ் மொழிதான் உலகில் மூத்தமொழி என்று சொல்கிறார்கள். தேவாரம் பாடி செங்கோலை கொடுத்தார்கள் என்று சொல்கிறீர்கள்.. நான் அதை மதிக்கிறேன். கோவிலில் ஒரு முறை தேவாரத்தை பாட சொல்லுங்களேன் பார்க்கலாம். இதையெல்லாம் கேட்டுவிட்டு சிரித்து விட்டு ரசித்து விட்டு போய்க் கொண்டு இருக்க வேண்டியதுதான். கோழிக்கு இரை போடும் போது அதன் மொழியில் பேசி அழைப்பார்கள்.. பின்னர் சட்டியில் கொதிக்க வைத்துவிடுவார்கள். அதேபோலத்தான் திருக்குறள், பாரதியார் பாட்டு சொல்வதை எல்லாம் கேட்டு மயங்கி விடக் கூடாது. விழிப்புணர்வோடு இருக்கணும் என்பதுதான் பொருள்.

சின்ன சின்ன நாடுகளில் கூட பல மொழிகள் ஆட்சி மொழியாக உள்ளது. உலகத்தின் மூத்த மொழி என்று சொல்கிறீர்கள். இந்திய மொழிகளில் தொன்மையை தமிழில் இருந்து அறியலாம் என்கிறீர்கள். அந்த மொழியை ஏன் ஆட்சி மொழியாக ஏன் தரவில்லை. பயிற்று மொழியாக தரவில்லை. தேர்தல் வரும் போது விழுந்து விழுந்து பேசுகிறீர்கள்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரணாப் முகர்ஜி என்றால் விட்டு விட்டு திறப்பீர்களா.. ராம்நாத் கோவிந்த் இருந்தாலும் இதேதான் நடந்து இருக்கும். நாங்கள் தீண்டத்தகாதவர்கள். மோடியும் திறக்கக் கூடாது.. சங்கராச்சாரியார் திறக்க வேண்டும் என்று குருமூர்த்தி சொல்கிறார். அது கொஞ்சம் பெரிய மடம் அவ்வளவுதான். நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது சரியான முடிவுதான். மக்களாட்சியின் தலைவரே இல்லாமல் மக்களவையை திறப்பது என்பது ஒரு அவமதிப்புதான். அது யாராக இருந்தால் என்ன.. அவமதிப்பு ஏற்படும் போது எல்லா கட்சிகளும் குரல் கொடுக்கின்றன. அதை நான் வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.