மதுரை மண்ணுக்கு திமுக செய்த பெரிய துரோகம்: அண்ணாமலை

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் நிதித் துறை பறிக்கப்பட்டது என்பது மதுரை மண்ணுக்கு திமுக அரசு செய்த துரோகம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

அமைச்சர் உதயநிதி குறித்தும், முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் குறித்தும் பிடிஆர் பேசியதாக சில ஆடியோ பதிவுகளை அண்ணாமலை அண்மையில் வெளியிட்டிருந்தார். அதில் உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் சம்பாதித்துவிட்டதாக பிடிஆர் கூறுவது போல இருந்தது. இந்த விவகாரம் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரும் புயலை கிளப்பியது. முதல்வர் குடும்பத்தினரின் தில்லுமுல்லு குறித்து ஆளுங்கட்சி அமைச்சரே இப்படி கூறுகிறாரே என பொதுமக்கள் மத்தியிலும் பேச்சு எழுந்தது. இதனிடையே, இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, ஆடியோவில் இருப்பது தனது குரல் அல்ல என பிடிஆர் விளக்கம் அளித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் அதிரடியாக நடந்தது. இதில் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்பத் துறை அவருக்கு வழங்கப்பட்டது. ஆடியோ விவகாரம் காரணமாகவே அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் இதுதொடர்பாக கேள்வியெழுப்பட்டது. அதற்கு பதிலளித்து அண்ணாமலை கூறியதாவது:-

பிடிஆர் மீது திமுக அரசு எடுத்த நடவடிக்கையை மதுரை மண்ணுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகவே நான் பார்க்கிறேன். பிடிஆர் அந்த ஆடியோவில் பேசியிருப்பது தரவுகளின் அடிப்படையிலான ஒரு ஆதாரம். பிடிஆர் ஒரு நூல் அளவு கூட தவறு செய்யவில்லை. அவரது கருத்தை தான் அவர் சொல்லி இருந்தார். ஆனால் இன்றைக்கு பிடிஆரின் துறையை மாற்றி தூக்கி வீசியிருக்கிறார்கள் என்றால், திராவிட மாடல் அரசில் யாருக்கு வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை தான் எடுத்துரைக்கிறது.

பிடிஆருக்கும், எங்களுக்கும் இடையே சித்தாந்த ரீதியிலான மோதலே இருக்கிறதே தவிர அவர் மீது எங்களுக்கு பெரிய அளவில் மரியாதை இருக்கிறது. படித்தவர், மதுரையில் ஒரு பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்தவர் என்கிற பெருமை அவருக்கு உண்டு. ஆனால் இன்று முதல்வர் குடும்பத்தை பற்றி பேசிவிட்டார் என்கிற ஒரே காரணத்துக்காக அவரை நீக்கி இருக்கிறார்கள் என்றால், இது மதுரை மண்ணுக்கு திமுக செய்திருக்கும் மாபெரும் துரோகமாகவே பார்க்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.