இதுதான் புதிய இந்தியாவா என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் கேள்வி!

போக்சோ சட்டம் இருக்கும் நாட்டில்தான் பாலியல் புகாருக்குள்ளான பிரிஜ் பூஷணை உடனடியாகக் கைது செய்வது பொருந்தாமல் இருக்கிறது. இதுதான் புதிய இந்தியாவா என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்வோரை உடனடியாகக் கைது செய்ய போக்சோ சட்டம் இருக்கும் நிலையில், பாஜக எம்.பி.யும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷண் சிங் மட்டும் பாஜகவைச் சேர்ந்தவர் என்பதால், அவரைக் கைது செய்ய வழியில்லை என்று கபில் சிபல் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவா் பிரிஜ் பூஷண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. எனவே அவரை கைது செய்ய வலியுறுத்தி, மல்யுத்த வீரா்கள் கடந்த ஒரு மாதகாலமாக டெல்லி ஜந்தா் மந்தரில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். கடந்த ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடைபெற்றது. அப்போது நாடாளுமன்றம் நோக்கி அவா்கள் பேரணியாக செல்ல முடிவு செய்தனா். எனவே அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியது மட்டுமின்றி, மல்யுத்த வீரா்கள் வினேஷ் போகாட், சாக்ஷி மாலிக், பஜ்ரங்க் புனியா ஆகியோரை கைது செய்து அழைத்துச் சென்றனா். இது தவிர மல்யுத்த வீராங்கனைகளை போலீஸாா் தரதரவென இழுத்துச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் ஜந்தா் மந்தரிலிருந்து போராட்டக்காரா்களை அகற்றிய போலீஸாா் மீண்டும் அங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று அறிவித்தனா்.

இந்த நிலையில், கபில் சிபல் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரிஜ் பூஷண் சிங்: போக்சோ சட்டம் இருக்கிறது மற்றும் 164 பேரின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பிரிஜ் பூஷணைத் தவிர மற்ற அனைத்துக் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் காரணம்..
1) அவர் பாஜகவை சேர்ந்தவர்
2) மல்யுத்த வீராங்கனைகள் முக்கியமல்ல; வாக்குகள்தான் முக்கியம்.
3) மத்திய அரசுக்கு எந்தக் கவலையும் இல்லை. இதுதான் புதிய இந்தியாவா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகார் மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும், பிரிஜ் பூஷணுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் இது தொடர்பான அறிக்கை இன்னும் 15 நாள்களில் தாக்கல் செய்யப்படும் என்று தில்லி காவல்துறை தெரிவித்திருந்ததாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த செய்திகள் ஊடகங்களில் வெளியான நிலையில், டெல்லி காவல்துறை, டுவிட்டர் மூலம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, போதிய ஆதாரம் இல்லை என்று வெளியான செய்திகள் தவறானவை. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய ஆதாரம் இல்லை என்று காவல்துறை செய்தித் தொடர்பாளரும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால், ஒரு சில மணி நேரத்தில் இந்த தகவல் டுவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. இதனை வாட்ஸ்ஆப் குழுக்களிலும் மக்கள் தொடர்பு அதிகாரி பதிவிட்டிருந்தார். அதுவும் நீக்கப்பட்டுவிட்டது. பிறகு, காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஹிந்தியில் மற்றொரு தகவலை பகிர்ந்தார், அதில், மல்யுத்த வீராங்கனைகள் பதிவு செய்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் நிலை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று பதிவிட்டுள்ளார். அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, வழக்கு விசாரணை குறித்து எதையும் வெளியில் சொல்லக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டில் டெல்லி காவல் துறையினரின் விசாரணையை முடிக்கும் வரை பொறுமை காக்குமாறு மத்திய விளையாட்டுத் துறை அனுராக் தாக்குர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

டெல்லி காவல்துறையினரின் விசாரணையை முடிக்கும் வரை மல்யுத்த வீரர்கள் காத்திருக்க வேண்டும். விளையாட்டு அல்லது விளையாட்டு வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. நாங்கள் அனைவரும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

5 நாள்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் ஜூன் 5 ஆம் தேதி டெல்லி எல்லை முற்றுகையிடப்படும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்த நிலையில், மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.