குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் பேசிய ஆடியோ வெளியிடப்படும்: மா.சுப்பிரமணியன்!

சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் பேசிய ஆடியோ வெளியிடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிதம்பரம் குழந்தை திருமணம் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு குழந்தை திருமணம் நடைபெற்றது என்றும் இரு விரல் சோதனை நடைபெறவில்லை என்றும் கூறினார். முன்னதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்தது. அப்போது ஆணையத்தின் உறுப்பினர் ஆனந்த் சிதம்பரத்தில் விசாரணை மேற்கொண்டார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு விரல் பரிசோதனை நடைபெறவில்லை என உறுதிபடுத்தினார். ஆனால் அவர் தற்போது தனது கருத்திலிருந்து பின் வாங்கியதோடு ஆளுநர் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் உண்மை என்று கூறியுள்ளார். அத்துடன் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அறிக்கை வழங்கினார்.

இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இரு விரல் பரிசோதனை நடந்தது என தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் தவறான தகவல் அளித்துள்ளார். மருத்துவரிடம் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் என்ன பேசினார் என்ற ஆடியோ ஆதாரம் உள்ளது. அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிகார போதையில் பேசியுள்ளார். இருவிரல் பரிசோதனை நடக்கவில்லை எனக் கூறிவிட்டு ஆளுநரை சந்தித்த பின் பரிசோதனை நடந்ததாக பேசுகிறார். ஆளுநருக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மிரட்டினால் ஆடியோ வெளியிடப்படும்.

தமிழ்நாட்டில் 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் சிறு குறைகளை வைத்து மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்குவோம் என்று சொல்வது ஏற்புடையதல்ல. புதுக்கோட்டையில் 50 மாணவர் சேர்க்கையுடன் பல் மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. புதுக்கோட்டை பல் மருத்துவ கல்லூரியை இந்தாண்டே முதலமைச்சர் தொடங்கி வைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.