வேங்கைவயல் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது: அன்புமணி!

வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமுதாயத்தினரின் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனிதக் கழிவு கலக்கப்பட்டது. மக்கள் பயன்படுத்தும் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுத்து வந்தன. இதுகுறித்து டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் வேங்கை வயல் மற்றும் இறையூர் கிராமங்களில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார், 147 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். தொடர்ந்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் டிஎன்ஏ சோதனையும் நடத்தி வருகின்றனர்.

முதல் கட்ட பரிசோதனையில் இறையூர் முத்துக்காடு பகுதியை சேர்ந்த 11 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 3 பேர் மட்டுமே டிஎன்ஏ பரிசோதனைக்கு வந்தனர். வேங்கை வயல் கிராமத்தை சேர்ந்த 8 பேர் பரிசோதனைக்கு மறுத்துவிட்டனர். இரண்டாவது கட்ட டிஎன்ஏ பரிசோதனைக்கு இறையூர் முத்துக்காடு, வேங்கை வயல் ஆகிய கிராமங்களை சேர்ந்த 10 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த 10 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிஏன்ஏ பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நடந்த இரட்டைக் கொலை வழக்கில் துப்புதுலக்கி, கொலையாளிகளை கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது மிகவும் சரியான செயல் என்று கூறியுள்ள அன்புமணி, ஊக்குவிப்பு தான் காவல்துறையினருக்கு உத்வேகம் அளிக்கும் என்று கூறி தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். மேலும் அதே புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமுதாயத்தினரின் குடிநீர்த்தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடுங்குற்றம் நிகழ்ந்து இன்றுடன் 5 மாதங்கள் 6 நாட்களாகிவிட்டது என்று பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், அதற்குக் காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டிக்க நடவடிக்கை எடுப்பாரா? என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள மற்றொரு டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தருமபுரி நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான திறந்தவெளி கிடங்கிலிருந்து 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமாகியிருப்பதை அத்துறையின் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். மாயமான நெல் மூட்டைகளின் மதிப்பு ரூ.1.50 கோடிக்கும் அதிகம் ஆகும். 24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ள கிடங்கிலிருந்து நெல் மூட்டைகளை வெளியாட்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்க முடியாது. 7000 டன் நெல் மூட்டைகள் மாயமானது அம்பலமான பிறகு, அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று கூறி, மிகப்பெரிய முறைகேட்டை, மோசடியை மூடி மறைக்க முயற்சிகள் நடக்கின்றன. அந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும். இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக இது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.