பிரதமர் மோடியை வெளிநாடுகளில் அவமானப்படுத்துவதுதான் ராகுல் காந்தி வேலை: பாஜக

பிரதமர் மோடியை எப்போதும் வெளிநாடுகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவமானப்படுத்துகிறார் என பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியர்களிடையே உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி, பாஜக, ஆர்.எஸ்.எஸ். குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பிரதமர் மோடியைப் பொறுத்தவரை எல்லாம் தெரிந்தவர் போல பேசுகிறவர்; கடவுளே அருகே உட்கார்ந்தாலும் பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என வகுப்பு எடுப்பார்; கடவுளே அதனால் குழம்பிப் போவார்; பிறர் என்ன சொல்கிறார்கள் என கேட்கவே மாட்டார்கள் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்துக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியிருப்பதாவது:-

வெளிநாடுகளுக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ளும் போது பிரதமர் மோடியை அவமானப்படுத்துவதில் குறியாக இருக்கிறார். ஆனால் ராகுல் காந்தி இந்தியாவைத்தான் அவமானப்படுத்துகிறார். பிரதமர் மோடி வெளிநாடுகளின் 24 பிரதமர்கள், ஜனாதிபதிகளை சந்தித்துள்ளார். உலகம் முழுவதும் அண்மையில் 50க்கும் மேற்பட்ட மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். பிரதமர் மோடியை தங்களது பாஸ் என ஆஸ்திரேலியா பிரதமர் புகழ்கிறார். ராகுல் காந்தியால் இதனை எல்லாம் சகித்துக் கொள்ள முடியவில்லை. இதனால்தான் பிரதமர் மோடியை ராகுல் காந்தி போகும் இடம் எல்லாம் விமர்சித்துக் கொண்டே இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

ஏற்கனவே ராகுல் காந்தி இங்கிலாந்தில் இப்படியான விமர்சனங்களை முன்வைத்தது மிகப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.