ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரஷ்யாவின் மகாடன் நகரில் தரையிறக்கப்பட்ட நிலையில், பயணிகள் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.
டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அதில், 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணித்தனர். இந்த விமானம் பறந்துகொண்டிருந்தபோது ஒரு என்ஜினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டறிந்த விமானி, விமானத்தை அருகில் உள்ள ரஷ்யாவுக்கு திருப்பினார். ரஷ்யாவின் மகாதன் விமான நிலையத்தை நெருங்கியதும், விமானத்தின் என்ஜின் பழுது குறித்து தகவல் தெரிவித்து அவசரமாக விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டது. அனுமதி கிடைத்ததையடுத்து, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என விமான நிறுவனம் தெரிவித்தது.
அமெரிக்கா நோக்கி வந்த விமானம் ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் பட்டேல் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அமெரிக்கா வந்த விமானம் ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அறிவோம். நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மேலும், அந்த விமானத்தில் எத்தனை அமெரிக்க குடிமக்கள் இருந்தனர் என்பதை இப்போது உறுதிப்படுத்த முடியவில்லை. பயணிகள் தங்கள் பாதையில் செல்ல வேண்டிய இடத்திற்கு மாற்று விமானத்தை அனுப்ப உள்ளனர்” என்றார்.
இந்நிலையில் அமெரிக்கப் பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம், உக்ரைனை தூண்டிவிட்டு ஆயுதங்களை வழங்கி போரை மறைமுகமாக அமெரிக்கா நடத்துகிறது என்பது ரஷ்யாவின் குற்றச்சாட்டு. அதனால் தங்கள் நாட்டு மக்களுடன் விமானம் ஒன்று ரஷ்யாவில் இருப்பதை அமெரிக்கா விரும்பவில்லை.
இந்த நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிடம் விமானத்தில் சிக்கியிருக்கும் பயணி ஒருவர் பேசி, அங்கு பயணிகளின் சிக்கல்களை விவரித்திருக்கிறார். ககன் என்ற அந்தப் பயணி தொலைபேசி வழியாக கூறியதாவது:-
இங்கு 230-க்கும் அதிகமான பேர் இருக்கிறோம். குழந்தைகளும் முதியவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். எங்களுடைய பைகள் இன்னும் விமானத்தில்தான் இருக்கின்றன. நாங்கள் பேருந்து மூலமாக பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறோம். சிலர் பள்ளிக்கூடம் ஒன்றிற்கு அனுப்பப்பட்டு அங்கு தரையில் விரிப்புகள் விரிக்கப்பட்டு படுக்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். கழிப்பறை வசதிகள் சரியாக இல்லை. இங்கு உணவு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. கடல் உணவும், அசைவ உணவுமே அதிகமாக கிடைக்கின்றன. சிலர் பிரெட்டும் சூப்புமே சாப்பிடுகின்றனர். முதியவர்களின் மருந்துகள் தீர்ந்துவிடும் நிலையில் உள்ளது. இத்தனைச் சிக்கல்களுக்கு மத்தியிலும் ரஷ்ய அதிகாரிகள் கனிவாக நடந்து கொள்கிறார்கள். ஆனாலும் மொழித் தடை இருக்கிறது. நாங்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இன்று(நேற்று) நாங்கள் விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவோம் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியுள்ள மகாடன் நகரம், வடக்கு ரஷ்யாவின் ஒகோட்ஸ்க் கடற்கரையில் அமைந்துள்ளது. மகாடன் ஒப்லஸ்ட் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து இங்கு விமானம் மூலம் செல்வதற்கு 7 மணிநேரம், 37 நிமிடங்களாகும். கடந்த 1993-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நகரம் கோலிமா தங்கவயல்களின் அமைவிடமாகவும் உள்ளது. இந்த நகரத்தில் சில ஆசிரியர் பயிற்சி, ஆராயச்சி நிறுவனங்களையும் கொண்டுள்ளது. இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இருந்து இந்த மகாடன் நகருக்கு விமானம் மூலமாக செல்ல சராசரியாக 23 மணி நேரம் 45 நிடமிடங்கள் வரை ஆகிறது.
இந்தநிலையில், மகாடனில் சிக்கியிருக்கும் பயணிகளை சான் பிரான்சிஸ்கோ அழைத்துச் செல்ல மும்பையில் இருந்து மாற்று விமானம் அனுப்பி வைக்கப்படும் என்று புதன்கிழமை ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. பயணிகளுக்கு அங்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படுள்ளதாகவும், அவர்கள் உள்ளூர் ஹேட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.