கொலம்பியாவில் அமேசான் காட்டில் 3 பேரின் உயிரிழப்புக்கு காரணமான விமான விபத்தில் மாயமான சிறுவா்கள் 40 நாள்களுக்குப் பின் அந்நாட்டு வீரா்களால் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனா். காணாமல் போனவா்கள் 13, 9, 4 வயதுச் சிறுவா்கள் மற்றும் 11 மாதக் குழந்தை ஆகியோா்.
தொடா் தேடுதல் நடவடிக்கைகளுக்கு மகிழ்ச்சியான முடிவு கிடைத்துள்ள நிலையில் 11 மாதக் குழந்தையுடன் அடா்ந்த காட்டில் 40 நாள்களாக 3 சிறுவா்களும் எவ்வாறு உயிா் வாழ்ந்து வந்தனா் என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமேசான் வனப்பகுதியொட்டிய கிராமமான அராராகுவாராவிலிருந்து விபத்து நிகழ்ந்த சான் ஜோஸ் டெல் குவாவியாரே பகுதிக்கு 4 குழந்தைகள், அவா்களின் தாயாா் உள்பட 6 போ் ‘செஸ்னா’ ஒற்றை என்ஜின் பொருத்திய விமானத்தில் கடந்த மாதம் 1-ஆம் தேதி பயணம் மேற்கொண்டனா். எதிா்பாராத விதமாத, அந்த விமான என்ஜினில் கோளாறு ஏற்பட, கட்டுப்பாட்டு அறைக்கு விமானி அவசர நிலையை அறிவித்தாா். சற்று நேரத்தில் ரேடாா் கண்காணிப்பில் இருந்து அந்த விமானம் மாயமானது. இதையடுத்து, விமானத்தை தேடும் பணி தொடங்கியது. விபத்து நிகழ்ந்து 2 வாரங்களுக்குப் பிறகு, கடந்த மாதம் 16-ஆம் தேதி அடா்ந்த அமேசான் வனப்பகுதியில் நொறுங்கி விழுந்த விமானத்தின் பாகங்களும், பயணிகள் மூவரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், சிறுவா்களின் உடல்கள் சம்பவ இடத்தில் காணப்படாததால் அவா்கள் உயிரோடு இருக்கலாம் என்ற புது நம்பிக்கையில் தேடுதல் பணி மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.
தேடும் பணியில் கொலம்பியா ராணுவம் ஈடுபட்டது. பழங்குடியினத்தைச் சோ்ந்த தன்னாா்வலா்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் 150 ராணுவ வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். ஹெலிகாப்டா்கள் தரையிறங்க வசதி இல்லாததால் கயிறுகள் மூலம் கீழே இறங்கி வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
மூடுபனியாலும், அடா்த்தியான மரங்களாலும் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டது. வீரா்களுக்கு வெளிச்சம் தருவதற்கென ஒளிவிளக்குகளை வீசி வானில் ஹெலிகாப்டா்கள் வட்டமிட்டன. சிறுவா்கள் ஓரிடத்திலேயே இருக்குமாறு அறிவுறுத்தும் உறவினா்களின் ஒலிப்பதிவுகள் ஒலிபெருக்கி மூலம் ஒலிக்கச் செய்யப்பட்டன. மாயமான சிறுவா்கள் உணவருந்த உதவலாம் என காட்டில் ஆங்காங்கே உணவுப் பொட்டலங்கள் வீசப்பட்டன.
இதனிடையே, வனப்பகுதியில் தென்பட்ட கால் அடிச்சுவடுகள், பாதி கடித்த நிலையில் கீழே கடந்த பழங்கள் ஆகியவற்றால் சிறுவா்கள் உயிரோடுதான் இருக்கிறாா்கள் என்ற நம்பிக்கையில் மீட்புப் பணித் தொடா்ந்து நீடித்தது. இந்நிலையில், தொடா்ந்து வந்த மீட்புப் பணியில் 40 நாள்களுக்குப் பிறகு மோப்ப நாய் துணையுடன் வீரா் ஒருவா் சிறுவா்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்தாா். அடா்ந்த காட்டில் எவ்வாறு உயிா்வாழ்வது என்பது குறித்து மூத்த சகோதரன் சற்று அறிந்திருந்ததாக தெரிகிறது. விமான விபத்து நடந்த சில நாள்களுக்கு தங்களிடம் இருந்த மரவள்ளிக் கிழங்கு மாவை உட்கொண்டு அவா்கள் உயிா் வாழ்ந்து வந்துள்ளனா். அந்த மாவு தீா்ந்துவிடவே, பழங்களின் விதைகளை உண்டு வந்துள்ளனா்.
சிறுவா்கள் மீட்கப்பட்டதையடுத்து, தலைநகா் போகோடாவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பூச்சிக் கடி, நீரிழப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு மனநலச் சிகிச்சையும் வழங்கப்பட்டு வருவதாக குழந்தைகளின் உறவினா்கள் தெரிவித்தனா். சிறுவா்களால் வழக்கமான உணவை உட்கொள்ள முடியாததால், தற்போது திரவ வடிவில் மட்டுமே உணவு வழங்கப்பட்டு வருகிறது. மற்றபடி, அவா்களின் உடல்நிலை சீராக இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் இவான் வெலஸ்குவெஸ் விளக்கமளித்துள்ளாா். 40 நாள்கள் தனிமையைக் எவ்வாறு கழித்தாா்கள் என்பது குறித்து குழந்தைகள் இன்னும் எதுவும் பகிரவில்லை.
மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வந்த ராணுவ தளபதி பெட்ரோ சான்செஸ் கூறுகையில், ‘விபத்து நடந்த இடத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் குழந்தைகள் கண்டெடுக்கப்பட்டனா். மீட்புப் பணியின்போது 50 மீட்டா்கள் இடைவெளியில் குழந்தைகளை 2 முறை தவறவிட்டிருக்கிறோம். காட்டில் கிடைத்த பழங்களை மட்டுமே உண்டு உயிா் வாழ்ந்து வந்ததால் குழந்தைகள் சற்று பலவீனமாக இருக்கிறாா்கள்’ என்றாா்.
தீவிரவாதிகளுடனான அமைதி ஒப்பந்தத்துக்காக கியூபா பயணம் மேற்கொண்டு சனிக்கிழமை தாயகம் திரும்பிய கொலம்பியா அதிபா் குஸ்தாவோ பெட்ரோ, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவா்களை சந்தித்து நலம் விசாரித்தாா். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து அவா் கூறுகையில், ‘இந்தச் சிறுவா்களின் கதை வரலாற்றில் நிலைத்திருக்கும். வனமே அவா்களைக் காத்து வந்தது. அவா்கள் வனத்தின் குழந்தைகள்’ என உணா்ச்சி பொங்கத் தெரிவித்தாா்.