வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய 19 பேரின் ஜாமீனுக்கு எதிராக வழக்கு!

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் வீட்டில் சோதனை நடத்த சென்ற வருமானத் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 19 பேரில் ஜாமீன், முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கில் கரூர் காவல் ஆய்வாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வருமான வரித் துறை உதவி இயக்குனர் கிருஷ்ணகாந்த், துணை இயக்குனர் யோக பிரியங்கா, ஆய்வாளர்கள் ஸ்ரீனிவாசராவ் மற்றும் காயத்ரி ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:-

கரூரில் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அசோக்குமார், மாரப்ப கவுண்டர் குணசேகரன், சுப்பிரமணியன், தங்கமணி ஆகியோர் வீடுகளில் மே 25-ல் சோதனை நடத்தினோம். சோதனை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டு கையெழுத்தும் பெறப்பட்டுள்ளது. இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1 கோடிக்கும் அதிக பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனை 11 மணி நேரம் நடைபெற்றது. இதனால் சோதனை நடந்த வீட்டின் முன்பு ஏராளமானோர் கூடினர். அங்கிருந்து கலைந்து போகுமாறு போலீஸார் கூறியதை அவர்கள் கேட்கவில்லை. நாங்கள் கூட்டத்தை கலைந்து போகுமாறு கூறியபோது அந்தக் கூட்டம் வருமான வரித்துறை அதிகாரிகளை மோசமாக பேசி, தாக்கவும் செய்தனர். எங்களிடமிருந்து லேப்டாப், 5 பென் டிரைவ் ஆகியற்றை பறித்து சென்றனர். அந்த பென் டிரைவ்களில் அரசுக்கு சொந்தமான முக்கிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

இந்தச் சம்பவம் நடைபெற்ற போது தமிழக போலீஸாரின் உதவி எங்களுக்கு கிடைக்கவில்லை. கூட்டம் அதிகரித்ததும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிகாரிகள் வெளியேறினர். மறுநாள் சிஆர்பிஎப் வீரர்களின் உதவியுடன் சோதனை நடத்தினோம். பின்னர் எங்களிடமிருந்து எடுத்துச் செல்லப்பட்ட லேப்டாப் மற்றும் பென் டிரைவ்கள் திரும்ப தரப்பட்டது. அந்த பென் டிரைவ்களில் தரவுகள் அழிக்கப்பட்டிருந்தன. அவைகள் பார்மட் செய்யப்பட்டிருந்தன. எடுத்துச் சென்ற பணத்தை திரும்ப வழங்கவில்லை. இது தொடர்பான வழக்கில் பலரை போலீஸார் கைது செய்தனர். அவர்களுக்கு கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது ஜாமீன் வழங்க வருமான வரித் துறை சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அந்த எதிர்ப்பை கருத்தில் கொள்ளாமல் கீழமை நீதிமன்றம் ஜாமீன், முன்ஜாமீன் வழங்கியுள்ளது. அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல், மோசமான வார்த்தைகளால் திட்டியது, ஆவணங்களை பறித்தது, தரவுகளை அழித்தது உள்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கியது சரியல்ல. எனவே இந்த வழக்கில் 19 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீன், முன்ஜாமீன்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் மனு தொடர்பாக கரூர் நகர காவல் ஆய்வாளர் தான்தோணிமலை, உதவி காவல் ஆய்வாளர் மற்றும் ஜாமீன், முன்ஜாமீன் பெற்ற 19 பேர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.