சீனாவில் உள்ள உணவகத்தில் எரிவாயு உருளை வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 31 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் டிராகன் படகு திருவிழா ஜூன் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இரண்டு நாள்களுக்கு பொது விடுமுறை அளிக்கபட்டுள்ளது. விடுமுறையைத் தொடர்ந்து மின்சுவான் நகரில் உள்ள பிரபல பார்பிக்யூ உணவகத்தில் நேற்று புதன்கிழமை இரவு 8 மணியளவில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அந்த சமயத்தில் உணவகத்தின் எரிவாயு உருளை வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டு உணவகம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது. தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், 31 பேர் சடலமாகவும், 7 பேர் படுகாயங்களுடனும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் அருகிலிருந்த சில கட்டடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்த மக்களும் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பாக உணவகத்தின் உரிமையாளர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உரிய நேரத்தில் மீட்புப் பணிகள் நடந்தாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜி ஜின்பிங் கூறும்போது, “காயமடைந்தவர்களை மீட்பதற்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உறுதியளிக்கவும், விபத்துக்கான காரணத்தை விரைவில் கண்டறியவும், சட்டத்தின்படி பொறுப்பை தீவிரமாக மேற்கொள்ளவும் நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.