தமிழ்நாட்டில் ஒரே ஒருமுறை பாஜகவை ஆட்சியில் அமர்த்துங்கள். தமிழ்நாட்டில் பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால், ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
தாம்பரம் அருகே இரும்புலியூரில் பாஜக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:-
நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தமிழ் மொழிதான் தாய். தொன்மையான, அழகிய தமிழில் பேச எனக்கும் ஆசைதான். எனக்கு தமிழ் தெரியாததால், என் தாய்மொழியான இந்தியில் பேசுகிறேன். தமிழ்நாட்டில் ராஜராஜ சோழனும், சேரர்களும் கடற்படையில் திறமையாக விளங்கினர். இது சித்தர்கள், ஆழ்வார்கள், திருவள்ளுவர் பிறந்த பூமி. மக்களின் வளர்ச்சிக்காக கட்சி நடத்துகிறது பாஜக. பிற கட்சிகள் ஆட்சியை பிடிப்பதற்காக கட்சி நடத்துகின்றன. திமுகவின் ஊழல் ஆட்சியை நாடே அறிந்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரே ஒருமுறை பாஜகவை ஆட்சியில் அமர்த்துங்கள். ஊழலற்ற ஆட்சியை தருகிறோம். பாஜகவை ஆட்சியில் அமர்த்தினால், ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள்.
செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். ஜனநாயகத்தை முடக்குவதாக பேசுகிறார், புலனாய்வு அமைப்புகளின் பணிகள் குறித்து கேள்வி எழுப்புகிறார். இதே செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது அவரை ஊழல்வாதி என்று கூறிய ஸ்டாலின், அவரை உடனே கைது செய்யவேண்டும் என்று பேசினார். இப்போது அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டால், அவர் அதை பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார். இந்த இரட்டை வேடம் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாட்டுக்காக பாடுபட்டு வரும் பிரதமரை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் குற்றம்சாட்டி வருகிறார்.
தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி தர்மப்படி, அதிமுகவுக்கு உரிய மரியாதை அளிக்க தயாராக உள்ளோம். முதல்முறையாக மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தபோது, அவருக்கு உறுதுணையாக இருந்தவர் ஜெயலலிதா என்பதை பாஜகவினர் ஒருபோதும் மறக்க முடியாது. மறக்கவும் மாட்டோம். கூட்டணி கட்சிகளை மிகவும் மதிக்கிறோம். ஏனென்றால் இந்த கூட்டணி கட்டாயத்தால் அமைந்தது அல்ல, அர்ப்பணிப்பினால் உருவானது. ஏழைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கும் ஜெயலலிதா அரும்பாடுபட்டவர். அதேபோல்தான் ஏழைகள் முன்னேறுவதற்காக நம் பாரத பிரதமர் மோடி பெரும் பங்காற்றி வருகிறார்.
இலங்கையில் உள்ள தமிழர்கள் அமைதி, சமத்துவம், கண்ணியத்துடன் வாழ்வதை உறுதி செய்ய பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. 2015-ல் பிரதமர் மோடி இலங்கை சென்றபோது, யாழ்ப்பாணத்துக்கும் சென்றார். அங்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றார். உள்நாட்டு போரால் வீடு இழந்த சுமார் 27,000 தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வீடு கட்டித் தந்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள் என்பதற்கு கணக்கே இல்லை. ஆனால், மோடி பிரதமரானதும் இலங்கையுடன் ராஜாங்க நல்லுறவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரை பார்த்தாலே, அவர் எப்படி வருவார் என்று சொல்ல முடியும். அண்ணாமலை தமிழ்நாட்டின் தலைவர் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த இந்தியாவின் தலைவராக வளர்ந்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.