மணிப்பூர் மக்களின் நிலை வருத்தமளிக்கிறது: சோனியா காந்தி!

வன்முறையால் மணிப்பூர் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை கண்டு வருத்தமடைவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விடியோ வெளியிட்டுள்ள சோனியா காந்தி, முன்னெப்போதும் இல்லாத வகையில் நடைபெற்ற இந்த கலவரத்தில் ஏராளமான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சொந்த மண்ணிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டது நீங்காத காயமாக உருவாகியுள்ளது. தமது குழந்தைகளுக்குத் தேவையான எதிர்காலத்தை அமைதியான முறையில் அமைத்துக்கொடுப்பதற்கான வழிகள் நமது தேர்வாக இருக்க வேண்டும். அமைதி, நல்லிணக்கத்திற்காக வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த சோதனையை ஒன்றாக சமாளிப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இதற்கு குகி-நாகா சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இவ்விரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மாத தொடக்கத்தில் பெரும் கலவரம் மூண்டது. இதில் 120 போ் வரை உயிரிழந்தனா். ஏராளமான வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் தீக்கிரையாக்கப்பட்டன.