‘தென் சீன கடல் பகுதியில் சீனாவின் அச்சுறுத்தல் வேகமாக அதிகரித்து வருகிறது; இதைத் தடுக்க அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் முன்வர வேண்டும்’ என்று தைவான் வெளியுறவு அமைச்சா் ஜோசப் வூ தெரிவித்தாா்.
தைபேயில் சா்வதேச ஊடகங்களைச் சந்தித்த தைவான் வெளியுறவு அமைச்சா் ஜோசப் வூ மேலும் கூறியதாவது:-
தென் சீன கடலில் உரிமையுள்ள அனைத்து நாடுகளுமே சீனாவுக்கு எதிராக அவசரமாக கைகோக்க வேண்டிய நேரமிது. ஏனெனில், தென் சீன கடல் பகுதியில் சீனாவின் அச்சுறுத்தல் வேகமாக அதிகரித்து வருகிறது. அந்த பிராந்தியத்தில் சீனாவின் போா்க் கப்பல்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் முன்வர வேண்டும். இதற்கு அனைத்து வகையிலும் உதவ தைவான் தயாராக உள்ளது.
சீனாவால் இந்தியா வடக்கு எல்லையில் பல ஆண்டுகளாக அச்சுறுத்தலை எதிா்கொண்டுள்ளது. இப்போது சீனாவால் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திலும் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மியான்மா், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளின் துறைமுகங்களை தனது கட்டுப்பாட்டில் எடுக்கும் நடவடிக்கையை சீனா தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.
இலங்கையின் பொருளாதாரச் சீா்குலைவுக்கு ஒரு வகையில் சீனாவும் முக்கியக் காரணம். தனது சுயநலத்துக்காக பிற சிறிய நாடுகளை சீனா பயன்படுத்திக் கொள்ளத் தயங்குவதில்லை. நமது பிராந்தியத்தில் அனைவரும் சீனாவுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும். சீனா விஷயத்தில் இந்திய அரசு உரிய கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. ஜனநாயக நாடுகள் அனைத்துக்குமே சீனாவால் அச்சுறுத்தல் உள்ளது என்றாா்.
தைவான் தங்கள் நாட்டின் ஒரு மாகாணம் என்று சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி கூறி வருகிறது. சுயாட்சியுடன் திகழும் தைவானை தங்கள் நாட்டுடன் இணைக்க ஆயுத பலத்தையும் பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று சீனா ஏற்கெனவே எச்சரித்துள்ளது. 1949-இல் நடைபெற்ற சீன உள்நாட்டுப் போருக்கு பிறகு தைவான் தனிநாடாக அறிவித்து செயல்பட்டு வருகிறது. ஆனால், சீனா இதை ஏற்கவில்லை.